politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நமது வீரர்கள் ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்துவதற்காக தங்களது மகத்தான பணியினை செய்து கொண்டிருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் அவசியம் அவரது பணியை செய்தாக வேண்டும். ஊரடங்கு காலக்கட்டத்தில் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு நேரடி பண மானியம் வழங்க வேண்டும்; இலவச உணவு, சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். 

                                 *********

டிசம்பர் இறுதிக்குள் நமது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்ற பிரதமர் மோடியின் உறுதிமொழிகளை தற்போது ஒன்றிய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது. ‘டிசம்பர் இறுதிக்குள் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியையும் கூட நிறைவேற்றுவதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கடந்த ஆறு மாத காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 10சதவீதத்திற்கும் குறைவாகத்தான் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மோடி அரசு கூறியுள்ள புதிய வாக்குறுதியை காப்பாற்றுவதற்குக் கூட நாள் ஒன்றுக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தினால்தான் சாத்தியமாகும். அதற்கு முதலில் தடுப்பூசி எங்கே இருக்கிறது பிரதமர் மோடி அவர்களே?
அதனால் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். போர்க்கால அடிப்படையில் உலகளாவிய முறையில் தடுப்பூசிகளை வாங்குங்கள்; அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.

                                 *********

இந்திய தேசத்தின் சொத்துக்களையெல்லாம் சூறையாடி உள்ள நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை சேவை அமைப்புகளையெல்லாம் தனியார்மயமாக்கிய நிலையில், பொதுத்துறை வங்கிகளையெல்லாம் பெருமளவிற்கு கபளீகரம் செய்துவிட்ட நிலையில், இன்சூரன்ஸை தனியாருக்கு தாரை வார்த்துவிட்ட பின்னர், நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுத்துறை சொத்துக்களை குறி வைத்து நகர்ந்திருக்கிற நிலையில், மோடி அரசு தற்போது “புனிதப் பசு” என்று குறிப்பிடுகிற பாதுகாப்புத்துறையின் நிலங்களையெல்லாம் சுருட்டிக் கொள்ளையடித்து கைமாற்றுவதற்கு துணிந்திருக்கிறது. கடந்த 250 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக பாதுகாப்புத்துறை நிலங்கள் தொடர்பான கொள்கையில் மிகப்பெரிய மாற்றங்களை மோடி அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. கண்டோன்மெண்ட் மசோதா 2020 என்ற பெயரிலான அந்த மசோதா, 1765ஆம் ஆண்டு வங்கத்தின் பாரக்பூரில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முதன்முதலில் கண்டோண்மெண்ட் (ராணுவ படைத்தளம்)டிற்காக உருவாக்கிய பாதுகாப்புத்துறை நிலங்கள் தொடர்பான கொள்கைகளை மாற்றும் நோக்கத்துடன் கொண்டுவரப்படுகிறது. 1801 ஏப்ரலில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் வெளியிட்ட உத்தரவில், “ராணுவப் படைத்தளங்களில் (கண்டோண்மெண்ட்) உள்ள பங்களாக்கள், வீடுகள், நிலங்கள் உட்பட எதுவும் ராணுவத்தினர் அல்லாத எந்தவொரு நபருக்கும் விற்பதற்கோ அல்லது தங்குவதற்கோ அனுமதிக்கப்படக்கூடாது” என்று கூறினார். இது உள்ளிட்ட அடிப்படை விதிகள் மிக நீண்டகாலமாக அமலில் இருந்து வருகின்றன. இந்த பழைய கொள்கையில் மாற்றம் செய்கிறோம் என்ற பெயரில் பாதுகாப்புத்துறை சார்ந்த நிலங்கள் அனைத்தையும் கைப்பற்றுவதற்கு வழிவகைகள் செய்யப்பட்டு வருகின்றன. இது மிகத்தெளிவான, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மிகப்பெரிய சூறையாடல் ஆகும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட ரூ. 40 லட்சம் கோடி அளவிற்குகட்டப்பட்டுள்ள 4.6 லட்சம் வீடுகள் விற்கப்பட முடியாமல் கிடக்கின்றன என்று தனியார் கட்டுமானத்துறையினர் மதிப்பிடுகிறார்கள்.  ரிசர்வ் வங்கி 
மற்றொரு கணக்கை குறிப்பிடுகிறது. நாடு முழுவதும் தற்சமயம் ரூ.80லட்சம்கோடி அளவிற்கு கட்டப்பட்டு வருகிற சுமார் 9.5லட்சம் வீடுகளைவாங்குவதற்கு ஆள் இல்லை என்று தெரிவிக்கிறது. இந்தப் பின்னணியில் பாதுகாப்புத்துறை நிலங்கள் சூறையாடப்படுவதற்கான முயற்சி நடக்கிறது. 

;