சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்., 23 அன்று ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்கியது. 45 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் மொத்தம் 19 விளையாட்டுப் பிரிவுகளில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 16 நாட்கள் நடைபெற்ற இந்த தொடர் ஞாயிறன்று நிறைவு பெற்றது. போட்டியை நடத்திய சீனா வழக்கம் போல ஆதிக்கம் செலுத்தி பதக்கப்பட்டியலில் முதல் இடம்பிடித்தது.
41 ஆண்டுகளாக சீனா முதலிடம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1982இல் இந்தியா வில் நடைபெற்ற 9-ஆவது சீசனில் இருந்து சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 9-ஆவது சீசனில் இருந்து 19-ஆவது சீசன் வரை 41 ஆண்டுகள் சீனா தொடர்ந்து பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து வரு கிறது. சீனா 201 தங்கம், 111 வெள்ளி, 71 வெண்கலம் என மொத்தம் 383 பதக்கங்களை வென்றுள்ளது. குறிப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவின் 2-ஆவது அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இதுவாகும். 1990இல் பெய்ஜிங்கில் நடைபெற்ற 16-ஆவது சீசனில் போட்டியை நடத்திய சீனா 199 தங்கம், 119 வெள்ளி, 97 வெண்கலம் என 415 பதக்கங்களை வென்றதே ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவின் அதிகபட்சப் பதக்க எண்ணிக்கை யாக உள்ளது. நடப்பு சீசனில் சீனாவின் தங்கப்பதக்க எண்ணிக்கையை கூட பதக்கப் பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்த ஜப்பான் தனது மொத்த பதக்க எண்ணிக்கையின் மூலம் தொட முடியவில்லை. ஜப்பான் 52 தங்கம், 67 வெள்ளி, 69 வெண்கலம் என மொத்தம் 188 பதக்கங்களை வென்றுள்ளது.
பதக்கப் பட்டியல்
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1.சீனா 201 111 71 383
2.ஜப்பான் 52 67 69 188
3.தென்கொரியா 42 59 89 190
4.இந்தியா 28 38 41 107
5.உஸ்பெகிஸ்தான் 22 18 31 71
6.சீனா தைபே 19 20 28 67
7.ஈரான் 13 21 20 54
8.தாய்லாந்து 12 14 32 58
9.பஹ்ரைன் 12 3 5 20
10.வடகொரியா 11 18 10 39
அடுத்து ஜப்பான்
19-ஆவது சீசன் சீனாவில் நிறைவு பெற்ற நிலையில், 20-ஆவது சீசன் ஜப்பானின் முக்கிய நகரான நகோயாவில் 2026இல் நடைபெறுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது என்றாலும், 2022இல் நடைபெற வேண்டிய 19-ஆவது சீசன் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2023இல் நடைபெற்றது. ஒருவருடம் தாமதமாக நடைபெற்றாலும், ஜப்பான் அரசு 3 ஆண்டுகளில் அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த சம்மதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.