politics

img

பம்மிய கமல்... குழம்பிய தொண்டர்கள்

“நான் ஏன் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கவில்லை என்று கேட்கிறார்கள்? நான் இப்போது உங்கள் மத்தியிலேயே தானே நின்று கொண்டு இருக்கிறேன்” என்று கமல் அடித்த ஜோக்கை தொண்டர்கள் ரசிக்கவில்லை. அத்தோடு அவர் நிற்கவில்லை. எனது இலக்கு 234 தான் என்றார். அப்போது, நமது நிருபர் காதில் விழுந்த கமெண்ட் ஒன்று : “நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் போது தலைவர் சட்டமன்றமே இலக்கு என்று பேசினால் மக்களிடம் எடுபடுமா?” எனது இலக்கு என்னவென்று சொல்லுங்கள்... என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டவுடன், பலருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை? ஏற்கெனவே தயாராக இருந்த சிலர் ``வருங்கால முதல்வர்’’ என்று கோஷம் போட்டனர். அங்கு நின்றிருந்த பொதுமக்கள் சிலர் ``இப்படி நிறைய பேருக்கு உசுப்பேத்தியதை பார்த்திருப்போமே’’ என்று சொல்லி சிரித்தனர்.மதுரையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில்தான் இந்தக் காட்சிகள்.அதைவிட முக்கியமானது, நரேந்திர மோடி, பாஜக என்ற வார்த்தைகளையே அவர் பயன்படுத்தவில்லை. மாற்றம்... மாற்றம்... என்று பயம்... பயம்... பாணியில் டயலாக் பேசியவர் யாரை மாற்ற வேண்டும் என்பதைச் சொல்வதில் பம்மிப் பம்மி பேசியது அங்கு நின்ற இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.கூட்டம் முடிந்தவுடன் ஓர் இளைஞரிடம் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டபோது, ``வெங்கடேசன் நல்லவர்... திறமையானவர்... நிறைய அறிந்தவர்...’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.