politics

img

மாணவர்களின் எதிரி மோடி அரசு

கடந்த தேர்தலில் கல்விக்காக செலவிடும் நிதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6சதவீதமாக உயர்த்தப்படும் என பாஜக தேர்தல்அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதிகாரத்திற்கு வந்ததும் கல்விக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக கல்விசார் முதலீடுகளுக்கு கடன் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தத் துவங்கியது.மேலும் கடந்த தேர்தல் அறிக்கையில் பள்ளிக்கல்விக்கும் ஆய்வுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்விநிலையங்களுக்கு வருகிற மாணவர்களின் எண்ணிக்கைபல மடங்குகளாக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்தது. மேலும் தலித்துகள், பழங்குடியினர் பெண்கள் என சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டோர் கல்வி பெறுவதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் எதையும் செய்யாத மோடிஅரசு, 2018ல் பெண் கல்விக்கான நிதியில் 64.1 கோடி ரூபாயைக் குறைத்து வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்பது என்கிற தங்கள் கொள்கைக்கு மத்திய அரசுவிசுவாசம் காட்டியுள்ளது.அதுமட்டுமின்றி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை தேர்ச்சி சார் திருத்தங்கள் மூலம் நீர்த்துப் போகச் செய்ததுடன் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தொழிலுக்குஅமர்த்துவதை சட்டப்பூர்வமாக்கி குழந்தை தொழிலாளர்முறையையும் குலத்தொழில் முறையையும் ஊக்குவித்ததே மோடி அரசின் சாதனை. 


கைவிடப்பட்ட ஆராய்ச்சிப் படிப்புகள்


மோடி ஆட்சியில், பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) புதிய விதிகள் அமலாக்கத்திற்கு பின் பல்கலைக்கழகங்களில் ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கை பலமடங்கு குறைக்கப்பட்டிருக்கிறது. 1000 ஆராய்ச்சி மாணவர் இடங்கள் 100 ஆகக் குறைக்கப் பட்டிருக்கின்றன. எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமின்றி ஆய்வுகளின் தரத்தையும் அதன் எல்லையையும் கட்டுப்படுத்தும் எதேச்சதிகாரத்தை இந்தப் புதியவித்தைகளின் மூலம் அரசு மேற்கொண்டது. என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், என்றவர்கள் என்ன படிக்கவேண்டும், நாம் என்ன விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதையும் அதன் முடிவுகள் எப்படி இருக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.


காவிமயமான பாடத்திட்டங்கள் 


பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் மாணவர்களிடையே மதஉணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அறிவியலுக்குப் புறம்பாகவும் பாடத்திட்டங்களில் புராணஇதிகாசப் புரட்டுகளை சேர்ப்பதோடு இந்திய தேசியஒருமைப்பாட்டிற்காக போராடிய காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள் பற்றிய பாடங்களை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும் பணியை மோடி அரசு செய்தது. சிபிஎஸ்இ, என்சிஆர்டி பாடப்புத்தகத்திலிருந்து, கேரளாவில் பெண்களின் மேல்சட்டை உரிமைக்காகப் போராடியநங்கேளியின் பாடத்தை முக்கியமானதல்ல என நீக்கிவிட்டனர். நங்கேளியின் வரலாறு என்பது, கேரள மறுமலர்ச்சி இயக்கங்களின் முன்னோடி வரலாறு. மகாராஷ்டிரா மாநிலப் பாடங்களில் இருந்து முகலாயர்கள் பற்றிய வரலாற்றை நீக்கியுள்ளனர். குரு உத்சவ், காயத்ரிமந்திரம் படித்தல், சமஸ்கிருத திணிப்பு என கலாசார அடிப்படைகளில் திரிபுகளை உருவாக்கும் வண்ணம் பாஜக அரசு செயல்பட்டுள்ளது. மேலும் வேதக் கல்விவாரியம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம்மாணவர்கள் மத்தியில் அறிவியலுக்கு புறம்பான மற்றும்பிரிவினைவாத கருத்துக்களை மோடி அரசு விதைத்து வருகிறது. 


புதிய கல்விக் கொள்கை எனும் வியாபாரத் திறப்பு 


எட்டாவதுவரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சிஅளிப்பது என்றிருப்பதை, தரம் என்ற பெயரில் இனி ஐந்தாவதுவரை மட்டும்தான் அனைவருக்கும் தேர்ச்சி எனச் சுருக்கியிருக்கும் புதிய கல்விக் கொள்கை, அதன்பின் தேர்ச்சியடையத் தவறும் மாணவர்களின் பள்ளிப் படிப்புக்கு எட்டாவதோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அவர்களைத் திறன் மேம்பாட்டுக் கல்விக்கு அனுப்ப உள்ளதாகக் குறிப்பிடுகிறது. பாடத் திட்டங்களைப் பொறுத்தவரை ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கான திட்டத்தை (ளலடடயரௌ) இனி மைய அரசு தயாரித்து அளிக்கும் எனக் கூறும் புதிய கல்விக் கொள்கை, சமூகஅறிவியலைப் பொறுத்தவரை பாதிப்பாதி என்ற விகிதத்தில் மைய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளப் பரிந்துரைக்கிறது. இப்படி நேரடியாகவே மாநிலப் பாடத்திட்டத்தில் தாக்குதல் தொடுக்கும் புதிய கல்விக் கொள்கை, அதன்மீது இன்னொரு அடியைக் கொடுப்பதற்காக நுழைவுத் தேர்வு என்ற ஆயுதத்தையும் கையில் எடுத்திருக்கிறது. மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மட்டுமின்றி, அனைத்து உயர்கல்விக்கும் தேசிய போட்டித்தேர்வு நடத்தப்பட வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.இதன் அடிப்படையிலேயே நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 


உயர் கல்வியைப் பொருத்தவரை, அதற்கான பாடத்திட்டத்தைக் கல்வியாளர்கள் தீர்மானிக்கக் கூடாது; அதனை சந்தையின் கையில், அதாவது கல்வி வியாபாரிகளின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்பதை புதியகல்விக் கொள்கை மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒட்டுமொத்தமாக கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து தேசியப் பட்டியலுக்குக் கடத்திப் போவது, தாய்மொழிவழிக் கல்வி, தேசிய இனங்களின் பண்பாட்டு உரிமை ஆகியவற்றைக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்துவது போன்றவற்றை கொண்டுள்ள இப்புதிய கல்விக் கொள்கையின் தாக்குதல்களை வெவ்வேறு வடிவங்களில் அனுபவித்து வருகிறோம். இப்படியாக ஐந்தாண்டுகளாக நம் கல்வி உரிமையைப் பறித்தவர்கள், நம் தேசத்தின் கல்வியைக் கூறுபோட்டு விற்றவர்கள், நம் மாணவர் உயிர்களை பலி கொண்டவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவர்களை வீழ்த்துவதே தேசத்தின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க உதவும்.


கட்டுரையாளர்: மாநிலச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்.