politics

img

தட்டிய கதவு திறக்கப்பட வேண்டும்! - எஸ்.சாம்பசிவன்

“எனது ஊழியர்களுக்கு சம்பளமும், பென்ஷன் தாரர்களுக்கு பென்சனும் கொடுத்திட நிதி அமைச்சகம் பண உதவி செய்ய வேண்டும்” என்று, யாரும் எதிர்பார்க்காத வேளையில் ரயில்வே துறை கோரிக் கைகளை வைத்து நிதித் துறையின் கதவை முதன் முதலாக தட்டியுள்ளது. ரயில்வே  எழுப்பியுள்ள  இந்த குரல்  எங்கேயோ கேட்டது போலவும் பிஎஸ்என்எல் நிறுவ னத்தை நினைவூட்டுவதாகவும் உள்ளது. 

“ஊருக்கே படியளந்தவன் நோயிலே” என்பது போல ரயில்வே துறை இப்போது மோசமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.” உழைத்தவன் வாழ்க்கை வீதியிலே“ என்ற  தொழிலாளர்கள் விவசாயிகளுக்காக  உருவாக்கப்பட்ட சொல்லாடல் இப்போது ரயில்வேக்கு பொருத்தமாயி ருக்கிறது. நாட்டிற்காக உழைத்துக் கொடுத்த ரயில்வே, வீதியிலே கையேந்தி நிற்கிறது. 1991 ல் காங்கிரஸ் ஆட்சி யின் போது ரயில்வேயில் சீர் திருத்தம்  என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட தனியார்மயம் என்ற சளி, காய்ச்சல் நோய் 2014ல் பாஜக - மோடி ஆட்சியில் கொரோனாவாக மாறி ரயில்வேயின் உயிருக்கு பேராபத்தை கொண்டு வந்து விட்டது. மிகப்பெரிய அழிவை நோக்கி ரயில்வே பய ணிக்கிறது. 

சீரும் சிறப்புடன், தேசத்திற்கே சேவை செய்து மத்திய அரசுக்கு மிகப்பெரிய கொடையாளியாக  இருந்து, இந்தியா வின் மிகப்பெரிய மக்களின் சொத்தாக, பொது துறையாக யிருந்து வந்த ரயில்வே துறை ஆட்சியாளர்களின் சதியால் நோய் வாய்ப்பட்டு மக்களிடமிருந்து விலகிச் செல்கிறது. ஏழை எளிய நடுத்தர மக்களின் வாகனமாக இருந்து வந்த ரயில் இனிமேல் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே என்ற நிலையை நோக்கிச் சென்று, கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டைக்கு இரையாகப் போகிறது. வானில் பறந்திடும் விமா னத்தில் எல்லோரும் பயணிக்க முடியாததைப் போல,  இனி மேல் தரையில் ஓடும் ரயிலிலும் எல்லோரும் பயணிக்க முடியாத கருமேகங்கள் சூழ்ந்து விட்டன. விமானத்தை வாய் பிளந்து பார்ப்பது போல ரயிலையும் பார்க்கக் கூடிய நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதை வேகமாக  உரு வாக்கி வருகிறது மோடி அரசு. ரயில்வே  அரசிடம்  இருக்கும் போதே நிதித் துறையை நம்பி இருக்கிறது. இது தனியாரிடம் போனால் லாபத்தை அள்ளிச் செல்பவர்கள் கையில் சிக்கி ரயில்வே சக்கையாகி விடும் என்பது திண்ணம். 

1853 ல் பிறந்து வளர்ந்து பீடு நடை போட்டு வந்த ரயில் ஒரு காலத்திலும் நின்றதில்லை. வேலை நிறுத்தத்தின் போதும்  அதிக நாட்கள் நின்றதில்லை, நிறுத்தப்படவும் இல்லை. 167  வருடங்களில் முதன் முதலாக தொடர்ச்சியாக 120 நாட்களை தாண்டி ரயில் நின்றிருக்கிறது. கொரோனா  ஊரடங்கில் உலகமே பாதிக்கப்பட்டதில் இந்திய ரயில்வே மட்டும் தப்ப முடியுமா?அரசின் கஜானா வே ரயிலின் வருமானத்தை நம்பித் தானிருக்கிறது. அதனால் தான் ரயில்வே துறையை விற்று கஜானாவை நிரப்பி கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைத்திடும் திட்டத்தோடு மோடி அரசு கடந்த  ஆறு வருடங்களாக முயற்சிக்கிறது.  கொரோனா பெயரைச் சொல்லி உடனடியாக ரயில்க ளையும், பாதைகளையும் விற்றுத்தின்னும் முடிவுக்கு வந்து விட்டது.  

கொரோனா நோயால் பீடிக்கப்பட்ட ரயில்வே வருமான மின்றி பொருளாதார சேற்றில் சிக்கித் தவிக்கிறது. அதனால் தான் முதன் முதலாக  ஊழியர்களுக்கு 18 மாதங்கள் பஞ்சப்படி  இல்லையென கையை விரித்தது. அடுத்து காலி யிடங்களை நிரப்பப் போவதில்லை என்று தேர்வுகளை ரத்து செய்தது. இதுவும் போதாதென்று இருக்கின்ற  இடங்களில் 50 சதத்தை சரண்டர் செய்வது என்று முடிவு  எடுத்தும் விட்டது. புலம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடத்திற்கு சுமந்து சென்றதில் ரயில்வேக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும் இவைகளனைத்தும் மக்கள் சேவை கள் என்பதை புரிந்து கொள்ள மத்திய அரசு தயாரில்லை. அதனால்  ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்திட நிதி அமைச்சகம் முன் வரவில்லை. அதனால் 13 லட்சம் ஊழியர்களுக்கு ஊதியமும்,  15 லட்சம் பென்ஷன்தாரர்களுக்கு பென்சனும் கொடுக்க பணமில்லாததினால் நிதித் துறை பணம் தர வேண்டும் என்று ரயில்வே அபயக் குரலை எழுப்பி  உள்ளது. இது  ஊழியர்களுக்கு பேரிடியாக விழுந்து இருக்கி றது. நிதித் துறையின் கதவுகளை தட்டிய ரயில்வேயின் கோரிக்கை நூறு சதம் நியாயமே!கேட்பதில் தவறில்லை. பொருத்தமான கோரிக்கை தான், வேறு வழியுமில்லை. 

கடந்த ஆறு வருடங்களாக  ஊழியர்களின் உழைப்பை,  ஊதியத்தை சுரண்டி ரயில்வே வருமானத்தையும் சுரண்டித் தின்று கொழுத்திருக்கும் நிதித்துறை ரயில்வே வருமா னத்தின் மூலம் தனது கஜானாவின் வயிற்றை நிரப்பியது. ரயில்வேக்கு  ஒரு சில கோடிகளை எலும்புத் துண்டாக போட்டு, விரிவாக்கப் பணிகளுக்கு சமாதி கட்டியது. கட்டு மான பணிகள் குறைக்கப்பட்டன அல்லது கைவிடப்பட்டன.  ஒரு  ஆணி வாங்குவதற்குக் கூட நிதி அமைச்சகத்திடம் அனு மதிக்காக மண்டியிட்டு கிடக்கிறது ரயில்வே. லட்சக்க ணக்கான  ஊழியர்கள் குறைக்கப்பட்டதாலும் காண்ட்ராக்ட் விடப்பட்டதாலும் ஊழியர்களின் ஊதியம்  உட்பட பொருளா தார செலவுகள் குறைக்கப்பட்டதாலும் பல்லாயிரம் கோடி கள் உபரியாக நிதித் துறைக்குப் போனது. 

ரயில்வே  ஊழியர்களுக்குரிய  ஊதியத்தையும், போனஸையும், பென்சனையும், ரயில்வே நிர்வாகமே நிதி ஒதுக்கி கவனித்து வருகிறது. இப்போது கொரோனாவினால் ஏற்பட்ட நிதி  நெருக்கடியால்  ரயில்வே சிக்கி சீரழிய துவங்கி உள்ளது. அதனால் தான்  ஊதியம், பென்சனுக்கு நிதி அமைச்சகம் பணம் தர வேண்டும் என்று நிதி துறை வாசலில் நின்று தர்மம் கேட்கிறது ரயில்வே.  தேசத்திற்காக  மக்களுக்காக  உழைத்து, தனது வரு மானத்தையும் கொடுத்து சக்கையாக நிற்கும் ரயில்வே வறுமையில் சிக்கி நிதிக்காக அமைச்சகத்தின் கதவுகளை முதன் முதலாக தட்டுகிறது. ரயில்வே துறையின் இந்த கெஞ்சல், ஊழியர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை உரு வாக்கி இருக்கிறது. நிதி அமைச்சகத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும்.  கடன் வலையில் சிக்கிய வங்கிகளுக்கு உதவியதைப் போல, கார்ப்பரேட்டுகளுக்கு நிதி ஒதுக்கி அவர்களுக்கு தாராளம் காட்டியதைப் போல ரயில்வே நிர்வாகத்திற்கும் நிதி ஒதுக்கி உதவ வேண்டும். 

கட்டுரையாளர் : டிஆர்இயு துணைத்தலைவர்