புதுதில்லி, மே 30-பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையின் உத்தேச பட்டியலில் ஓபிஎஸ்மகன் ரவீந்திரநாத் பெயர் இருந்தும், எடப்பாடியின் கடும் எதிர்ப்பு காரணமாக கடைசி நிமிடத்தில் ஓபிஎஸ் மகனின் மத்திய அமைச்சர் பதவிக்கனவு பறிபோனது.பொதுவாகவே புதிய அமைச்சரவை பொறுப்பேற்பதற்கு சில மணிநேரங்கள் முன்னதாகவே அமைச்சரவை பட்டியல் வெளியிடப்படும். ஆனால் இம்முறை யார் யார் மத்திய அமைச்சர்கள் என்பது ஏனோ ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதுஒருபுறம் இருக்க அதிமுகசார்பில் மக்களவையில் ஜெயித்த ஒரே ஒரு எம்பியான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு மத்தியஅமைச்சர் பதவி வாங்க ஓபிஎஸ் தில்லியில் தீவிரமாக லாபிசெய்து வந்தார்.ஆனால் அதற்கு அதிமுகவில் கடும்எதிர்ப்பு கிளம்பியது.முன்னாள் தமிழக அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம், சீனியர் என்ற அடிப்படையில் தனக்கேமத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என்று முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் அது அதிமுகவில் கடுமையாக எதிரொலிக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.இந்நிலையில் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வியாழனன்று காலை மே 30 முதல்வர் எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு சென்றார். எடப்பாடி பழனிசாமியோடு அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரையும் சென்றார். தில்லி விமான நிலையத்தில் எடப்பாடிபழனிசாமியை வரவேற்க பூங்கொத்துடன் காத்திருந்த ரவீந்திரநாத், தம்பிதுரையை பார்த்தவுடன் அவரது காலில் விழுந்திருக்கிறார். ‘அங்கிள், எனக்கு பிரைம் மினிஸ்டர் ஆபிஸ்ல இருந்து அமைச்சரா பதவியேத்துக்க அழைப்பு வந்திருக்கு. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க’ என்றிருக்கிறார்.அப்போது எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஆசிர்வாதம் செய்த தம்பிதுரை, தமிழ்நாடு இல்லத்துக்கு வந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பொங்கியிருக்கிறார். ‘சீனியர்கள் இத்தனை பேர் மாநிலங்களவை உறுப்பினராக இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தருக்கு அமைச்சர் பதவி வாங்கியிருக்கலாமே. கேட்பதாக இருந்தால் இருவருக்கு அமைச்சர் பதவி கேட்டிருக்க வேண்டும். அது என்ன பன்னீர்மகனுக்கு மட்டும் ஸ்பெஷலாக அமைச்சர் பதவி?’ எனக் கேட்டுள்ளார். இதுபோலவே மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமும் எடப்பாடி பழனிசாமியிடம் மீண்டும் குமுறல்களைக் கொட்டியிருக்கிறார்.தானும் இதுபோன்ற நிகழ்வுகளை விரும்பவில்லை என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி உடனடியாக பாஜக முக்கியப் பிரமுகர்களைத் தொடர்புகொண்டு, “அதிமுகவுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கமுடிந்தால் கொடுங்க. ரவீந்திரநாத்துக்கு மட்டும் மத்திய அமைச்சர்பதவி என்றால் அது எங்கள் கட்சிக்குள் தேவையில்லாத சிக்கல்களைஏற்படுத்திவிடும். எனவே அதிமுகசார்பில் யாருக்கும்அமைச்சர் பதவி வேண்டாம்” என்று வலியுறுத்தியிருக்கிறார். வியாழனன்று பகல் இந்த தகவல் பாஜகவினருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் பின்னர்அவரது பெயர் கைவிடப்பட்டிருக்கிறது. பதவியேற்பின் போதுதான் ரவீந்திரநாத் பெயர் இல்லை என்பது ஊடகங்களுக்கு தெரியவந்தது.