திருச்சி,
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன் இன்று காலை திமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு டிடிவி தினகரன் அணியில் கலைராஜன் இணைந்தார். அமமுகவில் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்து பதவியிலிருந்தும் நீக்கி நேற்று டிடிவி தினகரன் அறிவித்தார். இந்நிலையில் திருச்சியில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார். அப்போது ஏற்கெனவே அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலைராஜன், திராவிட இயக்கத்திற்கு மத்திய அரசால் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் திராவிட இயக்கத்தை காக்க தி.மு.க வில் இணைந்துள்ளேன் என்றார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வருவதால்தான் தி.மு.க வில் இணைந்தேன். எனக்கும் தினகரனுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. தி.மு.க கூட்டணிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்தார்.