politics

img

அந்தர் பல்டி அமித் ஷா

இந்திய மக்களிடையே ஒருவருக்கொருவர் பகைமையைத் தூண்டிவிட்டு பிரிவினை வசனங்களை உதிர்ப்பதில், வெறுப்புணர்வை ஊட்டி விஷக் கருத்துக்களைவிதைப்பதில் மோடியோடு சேர்ந்து கொண்டு ஜாடிக்கேற்ற மூடியாய் வலம் வருபவர் திருவாளர் அமித் ஷா.ஐந்து வருடங்களுக்கு முன்னால் இந்திய அரசியல் வானில் பரவலான அறிமுகம் எதுவும்இல்லாமல் இருந்த அமித் ஷா, இன்று பிஜேபி-யின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆசிகளோடு, மோடிஜியின் பலத்த சிபாரிசோடு அந்தக் கட்சியின் ‘தேசியத்’ தலைவராகிவிட்டார். பட்டியலின மக்களுக்கு எதிராகப் பழங்குடி மக்களைத் திரட்டுவது, தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் வகையில் ஆதிக்க சக்திகளை உசுப்பேற்றுவது, அடித்தட்டு மக்களிடையே ஒருவருக்கு எதிராக இன்னொரு பிரிவினரைத் தூண்டி விடுவது போன்றவை எல்லாம் அமித் ஷாவிற்குக் கைவந்த கலை.


ஆனால் நமது ஊடகங்கள் இந்த ஈனத்தனமான அரசியலைக் கண்டிப்பதற்குப் பதிலாக“அமித்ஷா வியூகம்”, “அமித் ஷா ஸ்கெட்ச்” என்றெல்லாம் எழுதி ஆளுங்கட்சிக்கு அனுசரணையாக நடந்து கொள்ள முயற்சிப்பது நாம் அறிந்ததே. வட இந்திய ஊடகங்கள் ஒரு படிமேலே போய் அமித் ஷாவின் இந்த வெறுப்புஅரசியலுக்கு “சோஷியல் இஞ்சினியரிங்“ என்றெல்லாம் பெயர் வைத்திருப்பது தனிக் கதை.தேர்தல் என்று வந்து விட்டால் மோடியும் அமித் ஷாவும் பல மடங்கு வேகமெடுத்து தங்களுடைய பாணி விஷம் தோய்ந்த பரப்புரைகளை முழு வீச்சில் மேற்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். இப்போதும் அமித் ஷா தேர்தல்பிரச்சாரம் என்ற பெயரில் தனது வெறியேற்றும்வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.மார்ச் இறுதியில் ஹைதராபாத்துக்கு வந்தஅமித்ஷா அங்கு போட்டியிடும் ஏஐஐஎம்எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியையும் அவரது கட்சியினரையும் “ரஸாக்கர்கள்” என்று குறிப்பிட்டார். 1947-ல் நாடு சுதந்திரம் பெற்றபோது இந்திய யூனியனுடன் இணைவதற்கு முதலில் முரண்டு பிடித்து, பிறகு பணிந்து வந்த ஹைதராபாத் நிஜாமின் படையில் இருந்த வீரர்களைக் குறிக்கும் “ரஸாக்கர்கள்“ என்ற சொல்லை அமித் ஷாபயன்படுத்தியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஆனால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படிப் பேசும் அமித் ஷா, யாருடைய விமர்சனங்களையும் கண்டு கொள்ளவில்லை.


அடுத்து, ஏப்ரல் முதல் வாரம் மேற்கு வங்கம் போன அமித் ஷா அங்கே போய், அண்டைநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறிய இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் “கரையான்கள்” என்றும், அவர்களை பிஜேபி அரசு ஓட ஓட விரட்டும் என்றும், அதற்காகத் தேர்தலில் ஜெயித்தவுடன் இந்தியா முழுவதும்தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) அமல்படுத்தப்படும் என்று ஒரே போடாகப் போட்டார்.ஏற்கனவே அஸ்ஸாமிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் பிஜேபி மாநில அரசுகள் என்ஆர்சி பதிவேட்டை வைத்துக்கொண்டு, அங்கே ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிற 40 லட்சம் பேருக்குக் குடியுரிமை கிடையாது என்று மிரட்டி வருகின்றன. வட கிழக்கு மாநிலங்களில் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மட்டும் இங்கு குடியேறி 6 வருடங்கள் ஆகியிருந்தாலே இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் மற்றவர்களுக்குக் கிடையாது என்றும்அறிவித்து, சிறுபான்மை மக்களைக் குறிவைத்து பிரிவினை அரசியல் செய்ய முற்பட்டுள்ளது பிஜேபி. மக்களிடையே பெரும் பீதியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் தற்போது உச்சநீதி மன்றம் தலையிட்டுள்ளது.இத்தகைய பின்னணியில் தான் என்ஆர்சிபதிவேடு என்பது இந்தியா முழுக்க அமல்படுத்தப்படும் என்று பிதற்ற ஆரம்பித்தார் அமித் ஷா. மேற்கு வங்கம் முழுக்க மற்ற பிஜேபி தலைவர்களும் இதையே வழிமொழிய ஆரம்பித்தார்கள்.


தேர்தல் களத்தில் இத்தகைய வெறிக்கூச்சல்கள் தங்களுக்குப் பலன் தருவதற்குப் பதிலாக, பாதகமாகவே அமைகின்றன என்பதை உளவுத்துறை அறிக்கைககள் மூலம்அறிந்து கொண்டார்களோ என்னவோ, இரண்டு நாட்களாக திடீரென்று அமித் ஷா குரலை மாற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்.மேகாலயாவின் ஷில்லாங் தொகுதி பிஜேபி வேட்பாளர் சோபார் சுள்ளை என்பவர்,என்ஆர்சி பதிவேட்டைப் பற்றி அமித் ஷா பேசினால் அவர் முன்னிலையிலேயே தீக்குளிப்பேன் என்று பேட்டியளித்ததும் பத்திரிகைகளிலே முக்கியமான செய்தியாக வந்தது.இத்தகைய சூழலில் தான், கொல்கத்தாவில் கடந்த திங்கட்கிழமையன்று பேசிய அமித்ஷா வங்கதேசத்திலிருந்து வந்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமைவழங்கப்படும் என்று கூறி யு-டர்ன் அடித்திருக்கிறார். போன வாரம் பேசியதை அப்படியேபிளேட்டை மாற்றிப் போடுகிறோம் என்பதைப்பற்றியெல்லாம் எந்தவித தயக்கமும் இல்லாமல் மக்களிடையே முழங்கியுள்ளார்.


அமித் ஷாவின் இந்த அந்தர் பல்டிக்கு அவர்களுக்கு இருக்கும் தோல்வி பயம் தான் முழுக் காரணம் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். மோடி-அமித் ஷா தலைமையிலான பிஜேபி-யின் மதவெறி முழக்கங்களையும், வெறுப்பு அரசியலையும் மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மக்கள் மிக நன்றாகவே புரிந்து வைத்திருப்பதால் அமித் ஷாவின் இந்த திடீர் நாடகம் நிச்சயம் எடுபடப் போவதில்லை.2015-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, “பிஜேபி தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள், ஜாக்கிரதை” என்று மக்களை மிரட்டினார் அமித் ஷா. அந்தத் தேர்தலில் பிஜேபி-யைப் படுதோல்வி அடையச் செய்து, அது தீபாவளிநேரமென்பதால் மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் பீகார் மக்கள்.இப்போதும் அதைப்போல, இந்திய ஒற்றுமைக்கு உலை வைக்கும் பிஜேபி-க்குப் படுதோல்வியைப் பரிசாகக் கொடுக்க வங்கம், வட கிழக்கு உள்பட நாடு முழுவதும் வாக்காளர்கள் தயாராகவுள்ளனர்.;