நம் எல்லோருக்கும் தெரிந்த மொஸில்லா ஃபயர்பாக்ஸ் இணைய உலாவி வெற்றுக் கூச்சல் போடாமல் பல புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. குரோம், ஓபேரா தராத வசதிகளையா ஃபயர்பாக்ஸ் தரப்போகிறது என்றுகேலிப்பேச்சுகளுக்கு நடுவேயும் இதன் சாதனைகள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.
நம்ம பிரௌசர்
ஃபயர்பாக்ஸ் என்பது கூகுள் போன்ற பெரிய கம்பெனியின் கீழ் உள்ள ஒரு மென்பொருள் அல்ல. அது ஓப்பன் சோர்ஸ் முறை யில் உலகில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர் களாக பங்கேறும் தொழில்நுட்ப வல்லுநர்களால் சிறிது சிறிதாக கட்டமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் மென்பொருள். இந்த மென்பொருள் காப்பிரைட் விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உங்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்தால் உங்களுக்கு பிடித்தது போல நீங்களேசில மென்பொருள் நிரல்கள் எழுதி சேர்த்துக் கொள்ளலாம். மாற்றிக்கொள்ளலாம். இதனை காப்பிலெப்ட் என்று குறிப்பிடுகின்றனர். குரோம் உலாவியும் ஓப்பன் சோர்ஸ்தான் என்று சொன்னாலும் அது கூகுள் என்ற தனிப்பட்ட நிறுவனத்தின் அங்கமாக இருக்கிறது.
கூகுள் குரோமிற்கு முன்பாகவே 2004ஆம் ஆண்டு முதலே ஃபயர்பாக்ஸ் உலாவி கணினிப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. குரோம் வந்தபிறகு கூகுளின் விளம்பர யுக்தி மற்றும் தொழில்நுட்ப வசதிகளால் இரண்டாம் இடத்திற்கு ஃபயர்பாக்ஸ் பின்தள்ளப்பட்டது. இருப்பினும் விரைந்து எழுந்து மேம்படுத்தப் பட்ட பல வசதிகளைத் தரத் தொடங்கியது. இன்று குவாண்டம் என்ற புதிய பதிப்பில் இன்னும் மிளிர்கிறது. 15ஆவது பிறந்த நாள் கொண்டாடும் ஃபயர்பாக்ஸ் பயனர்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் நன்கொடைகள் மூலமாகவே தனக்கான நிதியைப் பெற்று வருகிறது. “மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட பிரௌசர். லாபத்திற்காக அல்ல” என்பது இந்நிறுவனத்தின் லட்சிய வாசகமாகும்.
ஃபயர்பாக்ஸ் வகைகள்
மொஸில்லா குழுவினர் ஃபயர்பாக்ஸ் பிரௌசரில் பயனருக்கு ஏற்ப பல வகைகளை வெளியிட்டுள்ளனர். சாதாரண கணினிப் பயனருக்கு ஃபயர்பாக்ஸ் பிரௌசர், ஆய்வில் இருக்கும் வசதிகளை பயனர் மூலம் பரிசோதனை செய்வதற்கு ஃபயர்பாக்ஸ் பீட்டா, தொழில்நுட்ப வல்லுநர்கள் மேம்படுத்தவும், பரிசோதனைகள் செய்யவும் டெவலப்பர் எடிசன், அடுத்த தலைமுறைக்கான வசதிகளை பயனர் மூலம் பரிசோதிக்க ஃபயர்பாக்ஸ்நைட்லி ஆகிய பிரௌசர்கள் டெஸ்க்டாப் கணினிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் பயன்படுத்த ஃபயர்பாக்ஸ் செயலியும் விளம்பரங்கள், குக்கீகள், இணையதளங்களின் பின்தொடர்தல் ஆகிய பிரச்சனைகள் இல்லாமல் பாதுகாப்பாக இணையத்தை அணுக ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் என்ற செயலியும் கிடைக்கின்றன. ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் ஃபயர்பாக்ஸ் பீட்டா மற்றும் நைட்லி செயலியும் கிடைக்கின்றன. ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கும் செயலிகள் கிடைக்கின்றன.
வசதிகள்
பிரைவேட் பிரௌசிங்:
குக்கீகள், இணையதளங்களின் பின்தொடர்தல், தற்காலிகநிரல்கள் சேமிப்பு ஆகிய சிக்கல்கள் இல்லாமல் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இணையத்தில் உலாவ இந்த வசதி பயன்படுகிறது.
பின்தொடர்தல் மற்றும் குக்கீகளைத் தடுத்தல்:
பிரௌசரின் வலதுபுறம் உள்ள செட்டிங்ஸ் மெனுவைக் கிளிக் செய்தால் கண்டண்ட் பிளாக்கிங் (Content Blocking) என்ற வசதிகாட்டப்படும். இதனை கிளிக் செய்தால் தோன்றும் திரையில் Standard, Strict, Custom என்ற மூன்று வழிகள் காட்டப்படும்.எது உங்களுக்குத் தேவையோ அதனை தேர்வு செய்யலாம். இந்த வசதியை முக்கியமாக பிரைவேட் ப்ரவுசிங் போலப் பயன்படுத்தலாம் என்றபோதிலும், சாதாராணமாக பிரௌசிங் செய்யவும் பயன்படுத்தலாம். கேடயம் சின்னம் அட்ரஸ் பாரில் தெரிந்தால், இந்த ப்ரவுசரில் ட்ராக்கிங் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அறியலாம். ‘Clear private data on exit’ என்பதை தேர்வு செய்வதன் மூலம், பையர்பாக்ஸ் ப்ரவுசரை மூடும் போது அனைத்து தகவல்களும் அழிக்கப்படும். வைரஸ் மற்றும் தீங்கிழைக்கும் இணைய நிரல்களிலிருந்தும், வெளி இடங்களில் கணினி பயன்படுத்துவோருக்கும் உபயோகமாக இருக்கும்.
வீடியோவை நிறுத்துதல்:
முகநூல், யுடியுப் போன்ற வீடியோ தளங்களைப் பார்க்கத்திறக்கும்போது இணையப் பக்கங்களில் காணப்படும் வீடியோக்கள் தானாகவே இயங்கத் தொடங்கும். இவ்வாறு தானாக இயங்காமல் தடுக்கும் Autoplay Block வசதி சமீபத்தில் வெளியிடப்பட்ட 66வது பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இணையத்தளம் வேகமாக தரவிறங்கக்கூடியதாக இருப்பதுடன், டேட்டாவிரயமாவதும் தடுக்கப்படுகின்றது.
ஆட்ஆன் தொகுப்பு:
இதுபோல இன்னும் பல வசதிகளை இதன் ஆட்ஆன் என்ற சிறு மென் நிரல்கள் மூலம் பெறலாம். இது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் ஆப்ஸ் போன்று பல லட்சக்கணக்கான ஆட்ஆன் செயலிகள் ஃபயர்பாக்ஸ் ஆட்ஆன் இணையதளத்தில் கிடைக்கின்றன.
தீம்கள்
பயனருக்கு விருப்பமான பின்னணி நிறம் மற்றும் படம், மெனுஐகான்களை மாற்றுதல் உள்ளிட்ட பல வசதிகளை செட்டிங்ஸ் மெனுவில் உள்ள Customize என்பதைக் கிளிக் செய்து பெறலாம்.
ஃபயர்பாக்ஸ் பிற படைப்புகள்
மொஸில்லா ஃபயர்பாக்ஸ் பிரௌசர் திட்டத்துடன் வேறு சிலமென்பொருட்களை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மின்னஞ்சல்களை கணினியில் பதிவிறக்கி கையாளும் வசதியைத் தரும் தண்டர்பேர்ட் (Thunderbird), மென்பொருள் நிரல்களை சரிபார்க்க உதவும் பக்ஜில்லா (Bugzilla), பணிகளைக்குறித்துவைத்துக் கொள்ள உதவும் சன்பேர்ட் (Sunbird) காலண்டர் என்பன குறிப்பிடத்தக்கவை.தற்போது ஃபயர்பாக்ஸ் அக்கவுண்ட் என்ற பயனர் பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதியின் கீழ் புக்மார்க்குகளை ஆன்லைனில் சேமித்தல், ஸ்கிரீன் ஷாட்கள் எடுத்து சேமித்தல் போன்ற வசதிகளைப் பெறலாம்.
லாக் பாக்ஸ் (Firefox Lockbox)
ஆண்ட்ராய்ட் கைபேசிகளில் பாஸ்வேர்ட்களை நிர்வகிக்க இந்த செயலி உதவுகிறது. 256 பிட் என்கிரிப்ஷன் பாதுகாப்புடன் செயல்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
ஃபயர்பாக்ஸ் செண்ட்
சில வாரங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட பயனுள்ள வசதி இது. உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு ஃபயர்பாக்ஸ் அக்கவுண்ட் உருவாக்கிக் கொள்ளலாம். 2.5 ஜிபி அளவு இடம் தரப்படுகிறது. அதிகபட்சம் 7 நாட்கள் வரை கோப்புகளை ஆன்லைனில் வைத்திருக்கலாம். டவுன்லோட் எண்ணிக்கையை 1 முதல் 100 எண்ணிக்கை வரை வரையறை செய்யலாம். அத்துடன் 5 நிமிடம் முதல் 7 நாட்கள் வரை காலத்தையும் வரையறுக்கலாம்.
இதுபோன்ற வசதிகளை வேறு பல இணையதளங்கள் தந்தாலும், அவற்றில் இல்லாத தகவல் பாதுகாப்பு நம்பிக்கையை மொஸில்லா என்ற பெயர் நமக்குத் தருகிறது. இதில் அனுப்பப்படும் கோப்புகள் என்கிரிப்ட் செய்து அனுப்பப்படுகின்றன. தேவையெனில் பாஸ்வேர்ட் செட் செய்தும் அனுப்பலாம். அனுப்பவேண்டிய கோப்பை பதிவேற்றியதும் காட்டப்படும் லிங்க்கை காப்பி செய்து மின்னஞ்சல் கம்aபோஸ் விண்டோவில் பேஸ்ட் செய்து பெறவேண்டியவருக்கு அனுப்பலாம். பெறுபவருக்கு ஃபயர்பாக்ஸ் கணக்கு இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
தொகுப்பு : என்.ராஜேந்திரன்