பயர்பாக்ஸில் கூடுதல் பாதுகாப்பு பயர்பாக்ஸ் பிரௌசரின் புதிய பதிப்பு 74-ல் சில வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் தளத்தில் பயனர்களைக் கண்காணிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் கண்டெய்னர் எனப்படும் ஆட் ஆன் (add-on) முன்பே பயன்பாட்டில் இருந்தாலும் இப்பதிப்பில் இன்னும் சிறப்பாக செயல்பட சில மாற்றங்கள் செய்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயனர் தனிப்பயன் தளங்களைச் (custom sites) சேர்க்கும் வசதியும் உள்ளது. இதன் மூலம், பேஸ்புக் மூலம் பின்தொடரும் தளங்களின் கண்காணிப்பில் இருந்து விலகி சுதந்திரமான இணைய உலாவலைப் பெறலாம்.
இந்தக் கண்டெய்னர் ஆட்ஆன் எப்படி செயல்படுகிறது என்றால், ஃபேஸ்புக் பக்கத்தில் பயனர் நுழைவதிலிருந்து வெளியேறும் வரை தனி பிரௌசர் போன்ற செயல்பாட்டுடன் இயங்குகிறது. லைக் செய்வது, கமெண்ட் என அனைத்தும் இந்தக் கண்டெய்னருக்குள் தனிமைப்படுத்தப்படுகின்றன. பேஸ்புக் டேப்களை மூடுவது, பேஸ்புக் குக்கீகளை நீக்குதல் ஆகிய செயல்பாடுகள் மூலமும், ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதன் மூலமும் இந்த ஆட்ஆன் சிறப்பான வசதிகளைத் தருகிறது. இந்த வசதிகள் ஃபேஸ்புக் மற்றும் அதன் தகவல்களைப் பயன்படுத்தும் பிற இணையதளங்கள் நம்முடைய இணையப் பயன்பாட்டைக் கண்காணிப்பதிலிருந்து தடுத்துப் பாதுகாப்பை அளிக்கிறது.
ஆட்ஆன் மென்தொகுப்புகளை ஃபயர்பாக்ஸ் உடன் இணைப்பதை பயனர் மட்டுமே செய்து கொள்ளும் வகையில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் கணினியில் உள்ள அப்ளிகேஷன்கள் தங்களுடைய ஆட்ஆன் மென்பொருளை தானாகவே ஃபயர்பாக்ஸ் பிரௌசருடன் இணைப்பது தடுக்கப்படும். லாகின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்க ரிவர்ஸ் ஆல்பா முறை (Z-A) கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் எட்ஜ் பிரௌசர் புக்மார்க்குகளை இம்போர்ட் செய்வதற்கான வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
டிடிஎச் ஆண்ட்ராய்ட் செட்டாப் பாக்ஸ்
இந்திய DTH தொலைக்காட்சி சேவையில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்துடன் கூடிய செட்டாப்பாக்ஸ்களை சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்போது டிஷ் டிவி நிறுவனமும் தனது ஆண்ட்ராய்ட் செட்டாப்பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. D2H ஸ்ட்ரீம் என்ற பெயரில் அமைந்த இந்த செட்டாப் பாக்ஸின் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிடிஎச் சேனல்கள் பார்ப்பதுடன் இதில் மொபைல் அல்லது பிராட்பேண்ட் இணையத்தைப் பயன்படுத்தி பிரௌசிங், வீடியோ மற்றும் கேம் ஆப்களைப் பயன்படுத்த முடியும்.
இந்த HD செட்டாப்பாக்சில் ஆண்ட்ராய்ட் 9 இயங்குதளம், கூகுள் பிளே ஸ்டோர் வசதியுடன் கிடைக்கிறது. இணைய வீடியோ தளங்களான அமேசான் பிரைம், வூட், ஜீ5, யூடியூப் ஆகிய வீடியோ தளங்களைப் பார்க்க முடியும். இந்த செட்டாப்பாக்ஸ் பயன்படுத்தி சாதாரண டிவிக்களையும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவி போல மாற்றிக் கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற வசதி மற்றும் விலையில் போட்டி நிறுவனமான ஏர்டெல்லும் தனது எக்ஸ்ட்ரீம் ஆண்ட்ராய்ட் செட்டாப்பாக்ஸை விற்பனை செய்து வருகிறது.
லாவா பே செயலி
பிரபல போன் நிறுவனமான லாவா தனது அடிப்படை வசதிகள் கொண்ட போன் மாடல்களுக்கென்று லாவா பே என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. யுபிஐ முறையிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி இனி வரும் லாவா ஃபோன்களில் பதிவு செய்யப்பட்டு கிடைக்கும்.இந்த செயலியைப் பயன்படுத்த இண்டெர்நெட் வசதி தேவையில்லை. எளிமையான பயனர் இடைமுகத்தைக் கொண்ட லாவா பே செயலியில் பயனர்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் மொபைல் எண், அனுப்ப வேண்டிய தொகை மற்றும் யு.பி.ஐ. பின் அல்லது டிரான்சாக்ஷன் குறியீட்டைப் பதிவு செய்து பணம் அனுப்பலாம். இந்தப் பரிவர்த்தனையில், பணம் அனுப்பியவர் மற்றும் பெறுபவருக்கு நோட்டிஃபிகேஷன் தகவல் அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே லாவா போன் பயன்படுத்துவோர் தேவைப்பட்டால் அருகில் உள்ள லாவா சர்வீஸ் சென்டர்களுக்குச் சென்று இந்தப் புதிய செயலியை பதிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
யுயுமெயில்
ஆன்லைனில் பல்வேறு இணையதளங்களில் உங்கள் மின்னஞ்சல் கணக்கை பதியவேண்டிய சூழல் ஏற்படும். பாதுகாப்பு கருதி இதற்கென்று தனியாக மின்னஞ்சல் கணக்கை தொடங்கவேண்டியிருக்கும். இதற்கு மாற்றாக உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை மேக்ஸ்தான் பிரௌசர் வழங்கும் UU Mail என்ற மின்னஞ்சல் கணக்கின் வழியாகப் பெற்று உங்களுக்கு திருப்பி அனுப்பும் மிர்ரர் மெயில் முறையைப் பயன்படுத்தலாம்.யுயு மெயிலில் உங்களுக்கென்று ஒரு கணக்கைத் தொடங்கி உங்கள் வழக்கமான அல்லது மாற்று மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துவிட்டால் உங்களுக்கென்று புதிய மின்னஞ்சல் முகவரி ஒன்று கிடைக்கும். அதனை மின்னஞ்சல் பதிவு செய்யக்கூறும் எந்த ஒரு தளத்திலும் உள்ளிட்டு மின்னஞ்சல்களைப் பெறலாம். தேவையில்லையெனில் அவற்றை அன்சப்ஸ்கிரைப் செய்து நீக்கிவிடலாம். இந்த மின்னஞ்சல் வசதி மூலம் நம்மிடம் இருந்து மின்னஞ்சலைப் பெறும் இணையதளங்கள் வேறு இணைய நிறுவனங்களுக்கு முகவரிகளை விற்பதன் இணையதளங்களில் 5 ஜிபி அளவில் வழங்கப்படுகிறது. இதில் கணக்குத் தொடங்குபவர்கள் பாஸ்வேர்டுகளை பதிந்து வைத்துக் கொள்ள பாஸ்கீப்பர் (PassKeeper) வசதியும், குறிப்புகளைப் பதிவு செய்து கொள்ள (Maxnote) என்ற வசதியும் வழங்கப்படுகிறது. UU Mail என்பது மற்ற மின்னஞ்சல்கள் போலல்லாமல் மிர்ரர் மெயில் என்ற முறையில் செயல்படுகிறது. மின்னஞ்சல் முகவரி கேட்கும் இணையதளங்களிலெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் முகவரியைக் கொடுக்காமல் யுயுமெயில் மூலம் உருவாக்கிய முகவரியைக் கொடுத்துவிட்டால் போதும், மின்னஞ்சல் ஸ்பேம்களிடமிருந்து வடிகட்டி உங்களுக்கு ஃபார்வேர்ட் முறையில் உங்கள் வழக்கமான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும். இத்தளத்தின் முகவரி: https://www.maxthon.com/mx5/uumail/
===என்.ராஜேந்திரன்===