பணத்தை நடுரோட்டில் அள்ளி வீசிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நபரை, துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.
துபாயில் இருக்கும் முக்கிய வீதி ஒன்றில், ஆசியாவை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர், அந்நாட்டின் திர்கான் நோட்டுகளை வீதியில் வீசியபடி வீடியோ எடுத்து, அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், துபாய் போலீசார் சைபர் க்ரைம் அதிகாரிகள் உதவியுடன் அந்த நபரை கைது செய்தனர்.
இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, சமூக வலைத்தளத்தில் அதிக லைக்ஸ் மற்றும் ஃபாலோயர்ஸ் பெறவே, தான் இது போன்ற வீடியோவை பதிவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்நாட்டின், சைபர் க்ரைம் சட்டத்தின் படி, நாட்டின் நற்பெயரை கேலி செய்யும் அல்லது சேதப்படுத்தும் நோக்கில் செய்தி அல்லது வதந்திகளை வெளியிடும் நபர்களுக்கு சிறைத்தண்டனையும், 1 மில்லியன் டாலர் வரை அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.