வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சில ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் போன்களில் வாட்ஸ்அப் சேவை பயன்படுத்த முடியாது எரு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 31 முதல் விண்டோஸ் போன் பயனர்களுக்கான வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டது. இதை அடுத்து, வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய சாதனங்களிலும், iOS 8 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய சாதனங்களிலும் வாட்ஸ்அப் சேவை பயன்படுத்த முடியாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், இந்த பயனர்கள் ஏற்கனவே புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்குவதிலிருந்தோ அல்லது ஏற்கனவே உள்ள கணக்குகளை மீண்டும் சரிபார்க்கவோ தடைசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், அடுத்த மாதம் வரை அதைப் பயன்படுத்த அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் அனைவரும், இனி வாட்ஸ்அப் சேவையை பெற தங்கள் ஸ்மார்ட்போன்களை புதிய பதிப்புகளுக்கு அப்டேட் செய்ய வேண்டும் அல்லது புதிய ஸ்மார்ட்போனைப் பெற வேண்டும். மேலும், அவர்களின் எல்லா உரையாடல்களையும் இழக்காமல் இருக்க அவற்றை சேமித்து கொள்ளும் வசதி உள்ளது.
உங்கள் உரையாடல்களை சேமிக்க, வாட்ஸ்அப்பிற்குச் சென்று, நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் உரையாடல்களை திறந்து, திரையின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால், More > Export Chat > சென்று, நீங்கள் ஊடகத்தை (media) சேர்க்க விரும்புகிறீர்களா இல்லையா என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பொருத்தமான ஆப்ஷனை தேர்ந்தெடுத்ததும், உங்கள் உரையாடல்களைச் சேமிக்க விரும்பும் தளத்தைத் தேர்ந்தெடுக்கவும். மின்னஞ்சல் கணக்கிற்கு அனுப்பும் ஆப்ஷனையும் நீங்கள் தேர்வு செய்யலாம். அங்கு சேமிக்கப்பட்ட உரையாடல்களை, பின்னர் வர வைக்கலாம். Export Chat ஆப்ஷன் ஜெர்மனியில் கிடைக்கவில்லை என்று நிறுவனம் குறிப்பிடுகிறது.
மேலும், ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 உள்ளிட்ட KaiOS 2.5.1+ இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட போன்களில் வாட்ஸ்அப் இன்னும் செயல்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்ட் 4.0.3 மற்றும் அதற்கு பிறகு வந்த இயங்குதளங்களிலும், ஐஓஎஸ் 9 மற்றும் அதற்கு பிறகு வந்த இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.