internet

img

வலைப் பேச்சு- அது 5 ஸ்டார் குகை

நரேந்திர மோடி அவர்கள் கேதார்நாத் குகையில் போய் 15 மணி நேரம் தியானத்தில் அமர்ந்தார் என்றவுடன் எல்லோர் கற்பனையும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போய் விட்டன. 11755 அடி உயரம் என்றவுடன் எல்லோரின் புருவமும் உயர்ந்து விட்டது. ஏதோ பழங்காலத்து முனிவர்கள் ரேஞ்சுக்கு அவர் கொடுத்த போஸ் அகத்திய மாமுனிகளுக்கெல்லாம் சவால் விடுவதாய் இருந்தது. ஆனால் அந்த குகை பற்றி இந்துஸ்தான் டைம்ஸ் (19.05.2019) செய்தியை பாருங்கள். மின்சாரம் உண்டு. குடிநீர் உண்டு. வாஷ் ரூம் உண்டு. குகையை சுற்றிய வெளிப்புறம் கற்களால் இருக்கின்றன. அதற்கு மரக்கதவு உண்டு. பெல் அடித்தால் ஓடி வர 24×7 நேரமும் ஆள் உண்டு. காலை, மதியம், இரவு உணவு விரும்புகிற நேரத்தில் கிடைக்கும். இரண்டு வேளை தேநீர் உண்டு. அவசர தொடர்புக்கு உள்ளே தொலைபேசி உண்டு. வீக் இதழின் இணைய செய்தி (19.05.2019) அங்கு வை ஃபை இணைப்பு உண்டு என்கிறது.


அங்கு தங்க ஒரு நாளைக்கு ரூ 3000 வாடகை என போன வருசம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 3 நாட்கள் குறைந்த பட்சம் புக் செய்ய வேண்டும். ஒரு ஆளுக்கு ரூ.9000 கொடுத்தால்தான் அங்கு தியானம் செய்ய முடியுமென்றால் எத்தனை பேர் போவார்கள்! ஆள் வரவில்லை என்றவுடன் ரூ.990 என ஒரு நாள் வாடகை குறைக்கப்பட்டு மூன்று நாள் நிபந்தனையும் தளர்த்தப்பட்டுள்ளதாம்.இங்குதான் பிரதமர் முகத்தில் முனிவர் பாவத்தோடு அமர்ந்துள்ளார். ஊடக பரிவாரத்தோடு போய் மறு நாள் விளம்பரம் ஆவதையும் உறுதி செய்து கொண்டார். கடைசி வாக்குப் பதிவு நாளன்று தேர்தல் பிரச்சார விதிகளை நளினமாக மீறி தன் முகம் தொலைக் காட்சியில் இருப்பதை பார்த்துக் கொண்டார்.மொத்தத்தில் அது ஓர் ஃபைவ் ஸ்டார் குகை. சுற்றுலா, ஓய்வுக்கு அருமையான இடம். இப்போது விளம்பர தூதுவராய் பிரதமரே மாறிப் போனதால் அந்த குகைக்கு வருமானம் அதிகரிக்கலாம். மீண்டும் ரூ.3000 க்கு வாடகை உயரலாம். சாமானிய மக்கள் அண்ணாந்து பார்க்கலாம். இப்போது அதை கார்வால் மண்டல் விகாஸ் நிகாம் நிர்வகிக்கிறது. அது அரசு நிறுவனம் என்று நினைக்கிறேன். வருமானம் அதிகரித்து விட்டால் ஆசையாய் வாங்குவதற்கு தனியார்கள் காத்திருப்பார்கள்.


மோடி அவர்களின் இந்த பயணத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாம். மீறலையே அனுமதித்தவர்களிடம் அனுமதி பெற்று மீறுவது அடுத்த படிதானே. லவாசா வேறு கூட்டங்களுக்கு வரப் போவதில்லை.ஒரு பா.ஜ.க ஆதரவாளர் என்னிடம் கேட்டார். "பிரதமர் கடும் தியானம் என்று சொன்னாரா?". அவர் ஏன் சொல்ல வேண்டும்? அதுதானே ஊடக நிர்வாகத்தின் வேலை. அவர்கள் களமிறங்கி கலக்கி விட மாட்டார்களா? தியானத்திற்கு முன்னும் பின்னும் மோடி கையசைத்து போஸ் கொடுத்த லாவகத்தை பார்த்தீர்களா? மோடி திரைப்படம் வெளி வரவில்லை என்றால் அவர் சும்மா இருப்பாரா? இதோ நேரடி அலையில்... ஒரே கணத்தில் தேசம் முழுவதும் ரிலீஸ். அங்கு வசதிகள் இல்லை என்று மோடி சொன்னாரா... இப்படி ஒரு கேள்வி. இது கேள்வி அல்ல. முன்னரே தயாரிக்கப்பட்ட பதில். அவர்களுக்கு தேவை சில மணி நேரங்கள் மனதில் நிற்கிற பிம்பம். அது 24 மணி நேரத்தில் கலையலாம். கலைந்து விட்டு போகிறது. இது 24 மணி நேரத்திற்கான ப்ரொடக்சன்தானே. அடுத்து தேவைப்பட்டால் வேறு ஒரு பிம்பம்.மோடிக்கு மகிழ்ச்சி. தேர்தல் நாளிலும் கூட பிரச்சாரம் செய்த பெருமிதம். பா.ஜ.க ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சி. எப்படிப்பட்ட மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று.வெயிலில் காய்ந்து பூமி வெடித்து பச்சையே கண்ணில் படாமல் பசி கிறக்கத்தில் விழி இமைகள் சொருகி அமர்ந்திருக்கிற விவசாயிக்கு மோடியின் கை அசைவு மங்கலாகவே பஞ்சாயத்து டி.வியில் தெரிகிறது.

க.சுவாமிநாதன்