internet

img

கணினிக்கதிர் : வாட்ஸ்அப் பாதுகாப்பு குறிப்புகள்

சமீப காலமாக வாட்ஸ்அப் மீது பிரைவஸி மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த புகார்கள் அதிகமாக எழுப்பப்படுகின்றன. இருப்பினும் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்ததாக தகவல் இல்லை. பாதுகாப்பு அம்சங் களை அதிகரித்துவருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் ஒவ்வொரு புகாரின்போதும் பதிலாகத் தந்துகொண்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக MP4 படக் கோப்பு இணைப்புகளை வாட்ஸ்அப்பில் பகிர்வதன் மூலம் உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக எச்சரிக்கப்பட்டது. அதனைத் தடுக்கும் வாட்ஸ்அப் அப் டேட்டும் வெளியிடப்பட்டது.தொழில்நுட்ப குறைபாடுகளைப் பயன் படுத்தி ஹேக்கிங்கில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்துவது சவாலான பணிதான். அதேநேரத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நாமும் சில பாதுகாப்புக் குறிப்புகளை நடைமுறையில் செயல்படுத்தி, நம் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கலாம்.

வாட்ஸ்அப் வெப் எச்சரிக்கை
மொபைல் வாட்ஸ்அப் செயலியை கணினி மூலமாக அணுகுவதற்கு வாட்ஸ்அப்வெப் என்ற அப்ளிகேஷன் உதவுகிறது. இந்த அப்ளிகேஷனை கணினியில் பதிவிறக்கிநிறுவிப் பயன்படுத்தலாம் அல்லது பிரௌஸர் மூலமாக வாட்ஸ்அப் இணையதளத்தில்வழங்கப்பட்டுள்ள வெப் வசதியைப் பயன்படுத்தி கணினியில் நிறுவாமல் பயன் படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்தமென்பொருளைப் பதிந்துள்ள கணினி அல்லது பிரௌஸர்களில் உள்ள பாதுகாப்புகுறைபாடுகளைப் பயன்படுத்தி ஸ்கேமர்கள், ஹேக்கர்கள் வாட்ஸ்அப் தகவல்களை உளவு பார்க்கக் கூடும். அதேபோல வாட்ஸ்அப் மொபைல் ஆப்களிலும் போலியான ஆப்கள் பல கிடைக்கின்றன. தவறுதலாக அவற்றைப் பதிவிறக்கி பயன்படுத்தினாலும் உங்கள் தகவல்கள் திருடப் படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள் ளன. எனவே, ஆப்களை இன்ஸ்டால் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறைஅதுபற்றிய விபரங்களைப் படித்துப்பார்த்து சரியானதுதானா என்பதை உறுதிசெய்து பதிவிறக்கவும். புதிய வசதிகள் கிடைக்கிறது என்பதற்காக வாட்ஸ்அப் இணையதளம்அல்லது கூகுள் பிளே ஸ்டோர் தவிர்த்து வேறு மூன்றாம் நபர் இணையதளங்கள் மூலமாக எந்த ஒரு ஆப் அல்லது மென்பொருளையும் பதிவிறக்கம் செய்யவோ, பயன் படுத்தவோ வேண்டாம்.

பாதுகாப்பற்ற பேக்கப்கள்
வாட்ஸ்அப்பில் அனுப்புபவர் பெறுபவர் மட்டுமே திறக்கும் வகையில் இருமுனை பாதுகாப்பு குறியீட்டு அம்சம் (end-to-end encryption) பயன்படுத்தப்படுகிறது. இதுபாதுகாப்பானது. அதே நேரம் ஃபோன்தொலைந்துபோனாலோ, உடைந்துவிட்டாலோ, பழுது ஏற்பட்டாலோ வாட்ஸ் அப் தகவல்களை மீட்க ஆண்ட்ராய்டில் கூகுள் டிரைவ் பேக்கப் வசதியும், ஆப்பிள்போனில் ஐகிளவுட் பேக்கப் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த பேக்கப்களில் பதிவேற்றப்படும் வாட்ஸ்அப் தகவல்களைபாதுகாக்க வாட்ஸ்அப் பொறுப்பேற்பதில்லை. கூகுள் டிரைவ் அல்லது ஐ கிளவுட்கணக்குகள் லாகின் செய்யப்பட்ட கணினிகள் மற்றும் ஃபோன்கள் மூலமாக எளிதில் அணுக முடியும் என்பதால் அதில் பேக்கப் செய்யப்பட்ட வாட்ஸ்அப் தகவல்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியதே என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே கூகுள் டிரைவ் மற்றும் ஐ கிளவுட் பயன்படுத்தி பேக்கப் செய்பவர்கள் வேறு சாதனங்களில் ஜிமெயில் திறந்து பயன்படுத்திய பின் அதனை முழுமையாக லாக்அவுட் செய்து வெளியேறுவதை உறுதிப்படுத்தவும். ஃபோனை இழக்க நேரிட்டால் அந்த போனில் உள்ள வாட்ஸ்அப்மற்றும் ஜிமெயில், ஐகிளவுட் கணக்குகள் செயல்படாவண்ணம் முடக்குவதற்கான வேலைகளை உடனடியாக செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
வாட்ஸ்அப்பில் உள்ள ஒரு வசதியான ஸ்டேட்டஸ் பயன்படுத்தி அன்றைய வேலை,நிகழ்வுகள் குறித்த பதிவுகளை வெளியிடுகின்றனர். இந்தப் பதிவுகள் 24 மணி நேரம் மட்டுமே காட்டப்படும். இந்த ஸ்டேட்டஸ்தகவலை உங்கள் எண்ணைப் பதிந்துவைத்திருக்கும் எவரும் பார்க்கமுடியும் என்பது பொதுவான அம்சமாக உள்ளது.இதனை சிலருக்கு மட்டுமே காட்டும்படியாகச் செய்ய சில வசதிகள் பிரைவஸிசெட்டிங்ஸ் பகுதியில் கொடுக்கப்பட்டுள் ளன. Settings> Account> Privacy> Status என்ற பகுதியில் என்னுடைய அழைப்புப் பட்டியலில் இருப்பவர்கள் மட்டும் (My contacts) பார்க்கலாம், அழைப்புப் பட்டியலில் இல்லாதவர்களும் (My contacts except…) பார்க்கலாம், என்னால் பகிரப்பட்டவர்கள் மட்டும் (Only share with…) பார்க்கலாம் என்ற மூன்று வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் தேவையானதைக் கிளிக் செய்துபயன்படுத்துவது உங்கள் சுய பாதுகாப்பை வலுப்படுத்தும்.

வாட்ஸ்அப் அப்டேட்
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி அப்டேட் வந்துள்ளதா என்பதை பிளே ஸ்டோரில் பார்த்து பதிவிறக்கிக் கொள்ளவும் அல்லது ஆட்டோமேட்டிக் அப்டேட் செட்டிங்ஸ் அமைத்துக் கொள்ளவும். இது பிரச்சனைகளின் போது உங்கள் வாட்ஸ்அப் செயலி சிக்கலுக்குள்ளாவதைத் தவிர்க்க உதவும்.

===என்.ராஜேந்திரன்===