அடுத்த 50 ஆண்டுகளில் ஃபேஸ்புக்கில் உயிருடன் இருப்பவர்களின் கணக்குகளை விட இறந்தவர்களின் கணக்குகள் அதிகமாக இருக்கும் என ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் 1.4 பில்லியன் பேர், வரும் 2100-ஆம் ஆண்டுக்குள் இறந்துவிடுவார்கள். இப்போதுள்ள நிலை தொடர்ந்தால், 2070-ஆம் ஆண்டில் இறந்தவர்களின் கணக்குகள் உயிரோடு இருப்பவர்களின் கணக்குகளின் எண்ணிக்கை மிஞ்சிவிடும். இப்போது உள்ள நிலையை தொடர்ந்தால், நூறு ஆண்டுகளில் (2100-ல்), ஃபேஸ்புக்கில் உலக அளவில் 4.9 பில்லியன் நபர்களின் கணக்கு இறந்தவர்களின் கணக்குகளாக இருக்கும். ஆசியா அளவில் இறந்தவர்களின் கணக்குகளில் பாதி இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர்களின் கணக்காக, இரண்டும் சேர்த்து மொத்தம் 279 மில்லியனாக இருக்கும் என ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இது குறித்து, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர் கார்ல் ஓமன் கூறுகையில், "இறந்துபோன இத்தனை பேரைப் பற்றிய தகவல்கள் மீதான உரிமை யாருக்கு? எப்படி இதனை கையாள்வது? எதிர்காலத்தில் வரலாற்று ஆய்வு செய்பவர்களுக்கு பயன்படும் வகையில் என்ன செய்யலாம்? என பல கேள்விகள் இதன் மூலம் உருவாகியுள்ளது.
நம் டிஜிட்டல் எச்சங்கள் வருங்காலத்தில் அனைவருக்கும் பிரச்னையாக இருக்கப் போகிறது. ஏனென்றால் நாம் எல்லோரும் ஒருநாள் இறக்கப்போகிறோம். அப்போது சமூக வலைத்தளங்களில் நாம் விட்டுச் செல்லும் தகவல்களை என்ன செய்வது என்ற சிக்கல் அவர்களுக்கு ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.