உலகளவில் ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை 3.2 சதவீதம் சரிந்துள்ளதாக கார்ட்னர் ஃபோர்காஸ்ட் என்ற நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனை குறித்து அண்மையில் கார்ட்னர் ஃபோர்காஸ்ட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, உலக அளவிலான ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை கடந்த ஆண்டை விட 3.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள பெரும்பாலான ஸ்மார்ட் ஃபோன்கள் 4G தொழில்நுட்பத்தை கொண்டவை என்றும், 5G தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வருவதால், 4ஜி ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும், 5G தொழில்நுட்ப ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை, வரும் 2020 ஆம் ஆண்டு 10 சதவீதம் அதிகரிக்கும் என்றும், அதேபோல், வரும் 2023 ஆம் ஆண்டில் 56 சதவீதம் அதிகரிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.