எங்கெங்கு காணினும் சூரைமொக்கை இளைஞர் குழாம் - இந்து தமிழ் திசை இதழில் செல்வேந்திரன் எழுதிய ஒரு கட்டுரை. திராவிடம், இட ஒதுக்கீடு, ஹைட்ரோ கார்பன், கீழடி, போக்சோ, ஆர்ட்டிக்கிள் 370, தேசிய கல்விக்கொள்கை, ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ், நீர் மேலாண்மை, ஆவாஸ் யோஜனா, ஸ்மார்ட் சிட்டி , பொருளாதார நெருக்கடி,..என எந்தவொரு கேள்விக்கும் கல்லூரி மாணவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் சினிமா பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் மாய்ந்து பாய்ந்து பதில் சொல்கிறார்கள்,...இன்றைய கல்லூரி மாணவர்கள் குறித்து கவலைப்படும் கட்டுரையாளர் மொக்கை என்கிற சொல்லுக்கு கூர்மையற்ற, மொக்கு, மொண்ணை என்பதாகப் பொருள் தந்திருந்தார். குழாம் என்பது என்ன?
இலங்கை தமிழர்களிடம் இச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘20 -20 மட்டைப்பந்து போட்டிக்கு இலங்கை குழாம் அறிவிப்பு - வீரகேசரி’. இங்கு குழாம் என்பது அணி.
விண்மீன் குழாம் (விண்மீன் கூட்டம்)
சென்னையில் இயங்கிவரும் ஓர் இலக்கிய அமைப்பு ‘சென்னை மரபுக்கூடல்’. இந்த அமைப்பு மரபு இல்லம், ஆற்றுப்படை, செம்மை நல அரங்கு, செம்மை நூலகம், நூல் விற்பனை, பொது அங்காடி, கருத்துப்பெட்டி, கற்போர் குழாம் என பல துணை குழாம்களால் இயங்குகிறது. இங்கு குழாம் என்பது படை என்று கொள்ளலாம்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் BATCH என்பதை குழாம் என வரையறுத்துள்ளது. அதாவது மூன்றாமாண்டு மாணவர்கள் சேர்க்கை என்பதை மூன்றாம் குழாம் சேர்க்கை என்கிறது. இங்கு குழாம் என்பது தொகுதி அல்லது ஆண்டு.
‘ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து கூடும் மனமுடையீர்கள் ‘ என்கிறார் பெரியாழ்வார். இங்கு ஏடு - உடல்; குழாம் - குழு.
‘ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்’ என்கிறது ஒன்பதாம் திருமறை. அமரர் குழாம் - தேவர்க்கூட்டம்.
கம்பராமாயணம் அயோத்திய காண்டம் 16 ஆவது பாடல் குழாம் எனபதற்கு திருவடி என்பதாக பொருள் தருகிறது.
கம்பராமாயணத்தில் கம்பர் குழாம் என்பதை திரள் என்பதாகக் கொண்டு பல வகையாகக் காட்சிப்படுத்தியுள்ளார். பதர்க் குழாம், பூரியர்(கீழ்மக்கள்) குழாம் , தேர் குழாம் , குடைஇழந்த வேந்தர் குழாம், கதிர்க் குழாம், கூடா மன்னர் குழாம், பிள்ளைக்குழாம், மகளிர் குழாம், இளைஞர் குழாம்;....இப்படியாக.
இராமன் அயோத்தி நகரை விட்டுப் பிரிகிறான். மக்கள் அழுகிறார்கள்
‘ஆடினர் அழுதனர்; அமுத ஏழ் இசை
பாடினர் அழுதனர்; பரிந்த கோதையர்,
ஊடினர் அழுதனர்; உயிரின் அன்பரைக்
கூடினர் அழுதனர் - குழாம் குழாம்கொடே’ இங்கு குழாம் குழாம்கொடே என்பது கும்பல் கும்பலாக ; கூட்டம் கூட்டமாக.
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் முத்தப்பருவம் ‘ மேயபல ஆரியர் குழாத்தினுள் பூரியர்/ விராயதென வாய தூய/வெள்ளோதி மக்குழாம்/ நிலைகுலைய மேதிகால்’ என்கிறது. அதாவது, ஆரியக் கூட்டத்தில் கீழ்மக்கள் கலந்திருப்பது அன்னம் புழங்கும் நீரில் எருமைகள் குளிப்பது போன்றது என்கிறார் திரிசுபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.
‘கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்’; ‘சான்றோர் குழாஅத்து பேதை புகல்’ இரு குறட்களில் குழாம் சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார். முன்னது கூட்டம், பின்னது சபை.
தொல்காப்பியம் - புள்ளி மயங்கியல் ‘குயின் குழாம், செலவு, தோற்றம், மறைவு’ என்கிறது. அதாவது இங்கு குயின் குழாம் என்பது மேகத்திரள்.
குழு (group); திரள் (bunch), கூட்டம் (crowd), சபை (assembly) , சங்கமம் (society), herd (மந்தை), company (குழுமம்), flock (தொகுப்பு), drove (சரம்) இச்சொற்களுக்கு நிகரான சங்கச்சொல் குழாம்.
குழாம் என்பதே குழுமம் - குழு என்பதாக மருவி இருக்கின்றன. இன்றைக்கு இச்சொல் கோஷ்டி என்றும் கும்பல் என்றும் பொருள்கொள்ளப்படுகிறது.