internet

img

கணினிக்கதிர் : அதிகரிக்கும் தொழில்நுட்ப மோசடிகள்... கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது - என்.ராஜேந்திரன்

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திநடைபெறும் சைபர் குற்றங்களும் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் 10 நிமிடத்திற்கு ஒரு சைபர் குற்றம் என்ற அளவில் நடப்பதாக சில ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. 

தமிழகம் முதலிடம்
இத்தகைய ஆன்லைன் மோசடிகளின் மூலமாக அதிகமாக பணத்தை இழந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையின்படி, கடந்த 2016 - 2017ஆம் ஆண்டுமுதல் 2018 - 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக 56 கோடி ரூபாய் அளவில் தமிழகத்தில் ஆன்லைன் மூலம்மோசடி செய்யப்பட்டதாகவும், 2ஆவது மாநிலமாக 46 கோடி ரூபாய் இழப்புடன் மகாராஷ்டிரா உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஆன்லைன் வங்கிமற்றும் வாலட் பணப்பரிமாற்ற முறை அதிகமாக முன்னெடுக்கப் பட்டது. இந்த திடீர் மாற்றங்களால் முழுமையான புரிதலும், பாதுகாப்பான செயல்முறையும் குறித்த விபரங்கள் ஏதும் தெரியாமல் எண்ணற்ற வாடிக்கையாளர்கள் பிரச்சனைகளுக்கு ஆளானார்கள். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி புதுப்புது மோசடிகளை தொழில்நுட்பத் திருடர்களும் அரங்கேற்றி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடிகள் பற்றி பல ஆயிரம் வழக்குகள் பதிவாகிவருகின்றன. கடந்த மார்ச் 2017 முதல் இந்த மோசடிகள் ஆறு மடங்காகஅதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த நிலையில் 12 ஆகஸ்ட் 2016 முதல் மார்ச் 2017 வரை 977 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான கால கட்டத்தில் 2,441 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரையிலான காலத்தில் 4,955 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏப்ரல் 2019 முதல் நவம்பர் 2019 வரையிலான 8 மாதகாலத்தில் மட்டும் 5,620 மோசடி வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மேற்கண்ட புள்ளிவிபரங்களை வைத்துப் பார்க்கும்போது சைபர்குற்றங்கள் மீதான அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லைஎன்பதையே இது காட்டுகிறது. 

விதவிதமான மோசடிகள்
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக சந்தை 2021ஆம் ஆண்டில் 84 பில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என்று டெலாய்ட் இந்தியாமற்றும் சில்லரை விற்பனை சங்கத்தின் அறிக்கை மதிப்பிட்டுள்ளது.எதையும் ஆன்லைனில் வாங்கலாம் என்ற போக்கு அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. ஆன்லைன் வர்த்தக மோகத்தைப் பயன்படுத்தி பல போலியான வணிக தளங்கள் உருவாக்கப்பட்டு மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன.

கியூஆர் கோட் மோசடிகள்
போலி இணைய தள மோசடி எனும்போது வங்கி இணைய தளங்கள், ஆப்கள் என அனைத்துமே இதில் அடங்குகின்றன. மின்னஞ்சல் இணைப்புகளைப் பயன்படுத்தி தவறான இணைய தளங்களுக்கு வாடிக்கையாளரை அழைத்துச் சென்று மோசடி செய்வது பழைய ரகம். தற்போது வங்கிக் கணக்கு விபரங்களை தட்டச்சு செய்யாமல் எளிதாக ஆப் மூலம் ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் கியுஆர்கோட் (QR Code - Quick response code) முறையைப் பயன்படுத்தியும் மோசடிகள் நடைபெறுகின்றன. கியூஆர் கோட் என்பது இணைய முகவரிகள், வங்கிக் கணக்கு விபரங்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள், பொருட்களின் தயாரிப்பு விபரங்கள் எனப் பல தரப்பட்ட தகவல்களை தட்டச்சு செய்துநேரத்தை விரயமாக்காமலும், பிழையின்றியும் கணினி அல்லது ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனுக்குள் விநாடி நேரத்தில் பதிந்து கொள்ளஉருவாக்கப்பட்ட ஒரு விரைவான தகவல் கடத்தும் முறையாகும்.

போன் பே, பேடிஎம், கூகுள் பே போன்ற நிறுவனங்கள் தங்களுடன்இணையும் வர்த்தக நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை யுபிஐமுகவரியை கியூஆர் கோட் வடிவில் ஸ்டிக்கர்களாக மாற்றி ஒட்டிவைக்கின்றனர். மோசடிக்காரர்கள் இவற்றை போலவே தங்களுடையயுபிஐ முகவரி கொண்ட புதிய கியூஆர் கோட் ஸ்டிக்கர்களை தயார்செய்து கடைக்காரருக்குத் தெரியாமல் மாற்றி ஒட்டிச் சென்று விடுகின்றனர். இதனை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தும் வாடிக்கையாளரின் பணம் திருடர்களின் அக்கவுண்டிற்கு போய்சேருகிறது. எனவே, பொதுவெளியில் வைக்கப்படும் இத்தகைய கியூஆர் கோட்பலகைகளை பாதுகாப்பான இடத்தில் வைப்பதும், அதில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளவேண்டிய பொறுப்பும் வர்த்தகர்களுக்கு உள்ளது.

இணையத்தில் பயன்படுத்திய பொருட்களை விற்க நினைப்பவர்களைக் குறிவைத்தும் புதிய மோசடிகள் நடைபெறுகின்றன. OLXபோன்ற தளங்களில் பொருட்களைப் பார்த்துவிட்டு அவற்றை வாங்கிக்கொள்வதாகக் கூறி தான் அனுப்பும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பின் எண் கொடுத்தால் உங்களுக்கு பணம் வந்துவிடும் என்று கூறுகின்றனர். இதனை நம்பி, வாட்ஸ்அப் செயலியில் வரும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பே (PAY) என்று கொடுத்தால், அவர்களுடைய பணம் நம் அக்கவுண்டிற்கு வருவதற்கு பதிலாக நம்முடைய பணம் அவர்களுடைய அக்கவுண்டிற்கு சென்றுவிடும்.கியூ ஆர் கோட் என்பது ஒருவருக்கு பணம் அனுப்புவதற்கு மட்டுமே.அதனைக் கொண்டு யாரிடமும் பணம் பெற முடியாது என்ற அடிப்படையான விஷயத்தை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.

ஜன்தன் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி மோசடி
அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற முழக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஜன்தன் வங்கி சேமிப்புக் கணக்குகளை அப்பாவி விவசாயிகளிடம் KYC நடைமுறைகளைக் காரணம் காட்டி அவர்களின் விபரங்களையும் கட்டை விரல் ரேகை பதிவுகளையும் பெற்று கணக்குகள் திறந்து அதில் மோசடி பணத்தை பரிவர்த்தனை செய்த சம்பவங்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

போலிகளிடம் கவனமாக இருக்கவும்
போலி ஷாப்பிங் தளங்கள், ஃபேஸ்புக் பயன்படுத்தி போலி நபர்களின் பக்கங்கள், யுபிஐ வாலட் ஆப்களில் போலி ஆப்கள், மணமகன் மணமகள் தேடும் மேட்ரிமோனியல் தளங்களில் மோசடி எண்ணத்துடன் போலியான தகவல்களைக் கொடுப்பவர்கள் என நம்மைச்சுற்றி நடைபெறும் எண்ணற்ற சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கவனமாகவும் எதையும் ஒருமுறைக்கு இருமுறையோசித்து செயல்படுவதும் அவசியமானதாகும்.

====என்.ராஜேந்திரன்====

;