india

“நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப் பெரிய தவறு” இந்திய விமானப்படை தளபதி பேட்டி

புதுதில்லி, அக். 4- பாலகோட் தாக்குதல் சம்பவம் நடந்த மறுநாள் ஜம்மு, காஷ்மீரில் இந்திய விமானப்படை விமானத்தின் மூலமே அதற்கு சொந்தமான ஹெலி காப்டர் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ஆறு விமானப்படை வீரர்கள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர். இந்திய விமானப்படை விமானம் ஒன்றில் இருந்து வந்த ஏவுகணைதான் பிப்ரவரி 27 அன்று அந்த எம்.ஐ -17  ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முடிந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார். இந்திய விமானப்படை தளபதி ராகேஷ்  குமார் சிங் பதோரியா. “அது ஒரு மிகப் பெரிய தவறு என்பதை ஒப்புக்கொள் கிறோம்; வரும் காலங்களில் இது மீண்டும் நடக்காது” என்று அவர் தெரிவித்தார்.  இதுதொடர்பான விசாரணை ராணுவ தீர்ப்பாயத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்து மேலும் பேசிய விமானப்படை தளபதி, “நமது ஏவுகணையே, ஹெலிகாப்டரை தாக்கியது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாக மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். மேற்கண்ட தகவல்களை ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 14 அன்று காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்கு தலில் இந்திய படை வீரர்கள் 40க்கும் மேலானவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தா னின் எல்லைக்குட்பட்ட பாலகோட் பகுதிக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. பிப்ரவரி 26 அன்று தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்தது. புல்வாமாவை போன்ற மற்றொரு தாக்குதல் நடைபெற்று விடக்கூடாது என்ற நோக்கத்தில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மிகப் பெரிய முகாமை தாக்கி அழித்ததாக இந்திய வெளியுறவுத்துறை அப்போது தெரிவித்தது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா  மாகாணத்தின், மன்ஷெரா மாவட்டத்தில் குன்ஹார் நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் தான் பாலகோட். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது  இந்நகரம். சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஆய்வுகள் நடைபெறும் இடங்களில் பாலகோட் நகரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

;