india

img

இந்திய ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கும் மோடி அரசுக்கு எதிராக கரம் கோர்ப்போம்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறைகூவல்

புதுதில்லி

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்க்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான மோடி  அரசின் நடவடிக்கைகளை தடுத்துநிறுத்துவதற்கான பெரும் போராட்ட அலைகளை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் உள்ள மதச்சார்ப்பற்ற ஜனநாயக கட்சிகள், மக்கள் இயக்கங்கள், அறிவுஜீவிகள் மற்றும் பிரபலமான தலைவர்கள் அடங்கிய  விரிவான கூட்டணியை உருவாக்க பணியாற்றுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் அக்டோபர் 30, 31 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. அதன்பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவிட்-19 வைரஸ் தொற்று
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளான நாடுகளிலும், அதன் காரணமாக அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மற்றும் இறந்தோர் எண்ணிக்கையிலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளும் தொடர்ந்து முதல் மூன்று இடங்களில் இருந்து வருகின்றன. இந்தியாவில் தொற்று பரவல் விகிதம், பாதிப்புக்கு உள்ளாகி பாசிடிவ் எனக் கண்டறிந்தோர் எண்ணிக்கையும், இறந்தோர் எண்ணிக்கையும் அச்சுறுத்தும் அளவிற்கு அதிகமாக இருக்கின்றன.
மத்திய அரசாங்கமும், பிரதமர் மோடியும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவது தொடர்பாக தங்களுக்கு எதுவும் பொறுப்பில்லை என்பதுபோல, அதற்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைக் கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டனர்.  
வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, கொரோனா வைரஸ் தொற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களை மேலும் கசக்கிப்பிழியக்கூடிய விதத்தில் பொருளாதார மந்தம் ஆழமாகி இருக்கிறது. இவற்றால் கோடிக்கணக்கான மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் 25க்குப்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியதுபோல,  பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு ரொக்க மாற்று மற்றும் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் அதை ஏற்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அவலநிலையிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை. இத்துடன் வேலையில்லாத் திண்டாட்டமும் பசி-பஞ்சம்-பட்டினியும் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

தடுப்பூசி
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக, தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் கூறிவந்திருக்கிறது. இதுதான் சுதந்திரம் பெற்றபின் இந்தியாவில் நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. பெரியம்மை நோய் ஒழிப்புப் பிரச்சாரம் தொடங்கிய காலத்திலிருந்து, சமீபத்தில் போலியோ ஒழிப்பு வரையிலும் இதுவே நடைமுறையாகும். மத்திய அரசாங்கம் இதற்குப் பிரதானமாகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும், மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு திட்டங்களை அரசு எப்போதும் மேற்கொள்ள வேண்டும்.   

இதேபோன்றே கோவிட்-19 தடுப்பூசிக்கும் அது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அநேகமாக இதற்கான தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கும் என நம்பப்படுகிறது. எனினும், மத்திய அரசாங்கம், இது தொடர்பாகவும் தன் பொறுப்புகளைக் கைகழுவிவிட்டது போன்றே தோன்றுகிறது. இதுதொடர்பாக மாநில அரசுகள் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று பொறுப்பை, மாநில அரசுகளின் பக்கம் தட்டிக்கழித்திருக்கிறது. இதனை ஏற்க முடியாது. மத்திய அரசாங்கம் இது தொடர்பாக தேசிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும், ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பு வசதிகளை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணி (QUAD)
மத்திய அரசாங்கம்,  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான ராணுவக் கூட்டணியில் தன்னையும் பிணைத்துக் கொண்டிருக்கிறது. இது, இந்தியா இதுவரையிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எவ்விதமான ராணுவ அல்லது நீண்டகால போர் சூழ்ச்சிக்கூட்டணியுடனும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் நம் நாட்டின் நலன்களில் சுயேச்சையான நிலைப்பாட்டை எடுப்பதை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வந்த அயல்துறைக் கொள்கையை, காலம் காலமாகக் கடைப்பிடித்து வந்த கொள்கையை, முற்றிலும் மறுதலிக்கக் கூடியதாகும். முதல் முறையாக, நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணி சார்பாக 2020 மலபார் கடற்படை பயிற்சி கூட்டாக நடத்தப்பட இருக்கிறது.

பொருளாதார மந்தம்
இந்திய ரிசர்வ் வங்கி, 2020-21 நிதியாண்டில், மைனஸ் (-) 9.5 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி ஏற்படும் என்று சித்தரித்திருக்கிறது. சர்வதேச நிதியம் இது மைனஸ் (-) 10.3 சதவீதமாக இருக்கும் என்று கூறியிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி, இவ்வாறான வீழ்ச்சிக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2016-17இல் 8.3 சதவீதத்திலிருந்து 2017-18இல் 7 சதவீதமாகவும், 2018-19இல் 6.1 சதவீதமாகவும், 2019-20இல் 4.2 சதவீதமாகவும், 2020-21இல் மைனஸ் (-) 9.5 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்ததே காரணம் என்று கூறியிருக்கிறது. இவ்வாறாக, கடந்த ஐந்தாண்டுகளில் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

மக்கள் மீதான துன்ப துயரங்கள் மேலும் அதிகரிப்பு
இத்தகைய பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. சுமார் 15 கோடி பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இவற்றின் காரணமாக தொழிலாளர் பங்களிப்பு விகிதம் கடுமையாக வீழ்ந்திருக்கிறது.  

அதிகரித்து வரும்  பசி-பஞ்சம்-பட்டினி
உலக அளவிலான பசி-பஞ்சம்-பட்டினி அட்டவணையில் மொத்தம் உள்ள 107 நாடுகளில் இந்தியாவின் நிலை 94ஆகக் குறியிடப்பட்டிருக்கிறது. இதற்கு, பாஜக அரசாங்கத்தின் படுமோசமான கொள்கைச் செயல்பாடுகளே காரணமாகும். இந்த அட்டவணையின்படி, இந்தியாவைக் காட்டிலும் நம்மைச் சுற்றியுள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் போன்ற சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன என்பது தெரிகிறது.இத்தகைய பசிக் கொடுமை நம் மக்களில் பெரும்பாலானவர்கள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை ஏற்க முடியாது. மத்திய அரசின் உணவுக் கிடங்குகளில் பல கோடி டன் உணவு தானியங்கள் அழுகி வீணாகிக் கொண்டிருக்கின்றன. இவை பட்டினியால் அவதியுறும் மக்களுக்கு இலவசமாக அளிக்கப்பட வேண்டும். ஒரு பக்கத்தில் பசி-பஞ்சம்-பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், இதற்கு நேர் எதிராக, மிகவும் வெட்கக்கேடான முறையில், இந்தியாவில் உள்ள 50 பணக்காரர்களின் செல்வம் 2020இல் இதுவரை 14 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் மீதான தாக்குதல்கள்
நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 29 தொழிலாளர் நலச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக நான்கு தொழிலாளர் சட்டங்கள், குறுகிய காலமே நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அநேகமாக தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு நலன்கள் சார்ந்த சட்டப்பிரிவுகள் அனைத்தும் முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றப்பட்டிருக்கின்றன. இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் தொழிலாளர்களை அடிமை நிலைக்கு மாற்றி அமைத்திருக்கின்றன.

பேரழிவு தரக்கூடிய வேளாண் சட்டங்கள்
சுய சார்பு என்ற பெயரில், பிரதமர் மோடி பின்பற்றிவரும் பொருளாதார சீர்திருத்தங்களின் ஒட்டுமொத்த தொகுப்பும் நம் பொருளாதாரத்தை தனியார் லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் சுயஅடிமைத்தனமான ஒன்றாக மாற்றி இருக்கிறது. மத்திய அரசாங்கம், நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் நாணமற்றமுறையில் வெட்டிக்குறைத்து, வேளாண் சட்டங்களை வஞ்சகமான முறையில் நிறைவேற்றி இருக்கிறது. இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் இந்திய வேளாண்மையையும், அதன் உற்பத்திப் பொருள்களையும், சந்தைகளையும் அந்நிய மற்றும் உள்நாட்டு விவசாய வர்த்தகக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கின்றன. இவை, இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வகை செய்யும் அதே சமயத்தில், நம் நாட்டின் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் துன்ப துயரங்களை அதிகரிப்பதோடு, நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திடும்.

‘இந்துத்துவா’ நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள்
பாஜக மத்திய அரசாங்கம், கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டும், சமூக முடக்கத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்திருக்கும் நிலையைப் பயன்படுத்திக் கொண்டும், இந்தியாவை ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சிநிரலான வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச ‘இந்துத்துவா ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல மூர்க்கத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தலித்துகள், பெண்கள், முஸ்லீம் சிறுபான்மையினர், அறிவுஜீவிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலச் சட்டமானது, அம்மாநிலத்தின் வளங்களும் மற்றும் மக்களும் சூறையாடப்படும் அதே சமயத்தில், அங்கே வெளியார் சொத்து மற்றும் நிலம் வாங்குவதற்கு அனுமதித்து, மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பை மாற்றுவதற்கான ஒன்றாகவே தோன்றுகிறது.

கேரளம்
கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைக் குறிவைத்து மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளைத் துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கத்தக்கது. கேரள மக்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள்.

மத்தியக் குழு அறைகூவல்கள்
மத்தியக்குழு நாடு தழுவிய அளவில் கீழ்க்கண்டவாறு பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறது:

1.    வேளாண் சட்டங்கள், தொழிலாளர் நலச்சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியிருப்பது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவுகள் எடுத்திருப்பது மற்றும் நாட்டின் சொத்துக்களை சூறையாட நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பது, அதிகரித்துக்கொண்டிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராகவும் அனைவருக்கும் கல்வி மற்றும் சுகாதாரம் அளித்திடவும், மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் சுயேச்சையான பிரச்சாரங்கள் மற்றும் கிளர்ச்சி நடவடிக்கைகளை கட்சி மேற்கொள்ளும்.

2.   2020 நவம்பர் 26-27 தேதிகளில் நடைபெறவுள்ள விவசாய சங்கங்களின் கிளர்ச்சிப் போராட்டத்திற்கு முழுமையான ஒருமைப்பாடு மற்றும் ஆதரவினை கட்சி  உரித்தாக்கிக் கொள்கிறது.

3.   2020 நவம்பர் 26 அன்று நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்த மேற்கொள்ள மத்தியத் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறைகூவலுக்கு முழுமையான ஒருமைப்பாடு மற்றும் ஆதரவை கட்சி உரித்தாக்கிக் கொள்கிறது.

4.   நவம்பர் 26க்கும் ஜனவரி 26க்கும் இடையேயுள்ள இரு மாத காலங்களில்,சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழான தேசத் துரோகப் பிரிவு ஆகியவற்றின் கீழ் சிறைகளில் அடைக்கப்பட்டு அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும், தலித்துகள்/பழங்குடியினர்/பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராகவும், நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச்சட்ட நிறுவனங்களை அரித்து வீழ்த்திக்கொண்டிருப்பதற்கு எதிராகவும், தேர்தல்களில் மக்களின் உணர்வுகளை மறுதலிக்கக்கூடிய விதத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் பண பலத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராகவும், மனித உரிமைகள், குடிமை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள், மக்கள் இயக்கங்கள், அறிவுஜீவிகள் மற்றும் பிரபலமான பிரமுகர்கள் ஆகியவர்களின் விரிவான கூட்டணி அமைக்கப்படும்.

5. டிசம்பர் 10 - சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். டிசம்பர் 18 சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் தினமாகும். டிசம்பர் 10இலிருந்து 18 வரை ஒரு வாரம் நாடு முழுதும் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் பிரச்சனைகள் மீது நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்படும்.

இப்பிரச்சனைகள் மீது மாநில அளவில் கூட்டணிகள் மேற்கொண்டு, மிகவும் விரிவான அளவில் மக்களை அணிதிரட்டி, 2021 குடியரசு தினத்தை அரசமைப்புச்சட்டப் பாதுகாப்புக்காக அறைகூவல் விடுக்கக்கூடிய விதத்தில் நடத்திட வேண்டும்.
இவ்வாறு மத்தியக்குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழில்: ச.வீரமணி

;