india

img

நாங்கள் எங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம்! - பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகளை திருப்பித் தர விளையாட்டு வீரர்கள் முடிவு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்றவர்கள் உள்பட பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தர முடிவுசெய்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி  டெல்லியில் 7வது நாளாக 1 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் பனியிலும் இரவு முழுவதும் சாலையிலேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நேற்றைய தினம் மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று விவசாயிகள் தங்கள் போராட்டங்களை பல இடங்களில் தீவிரப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் கர்தார் சிங், அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஜ்ஜன் சிங் சீமா மற்றும் அர்ஜுனா விருது பெற்ற ஹாக்கி வீரர் ராஜ்பீர் கவுர் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களும் டிசம்பர் 5ஆம் தேதி டெல்லிக்குச் சென்று தங்கள் விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஜ்ஜன் சிங் சீமா கூறுகையில், "நாங்கள் விவசாயிகளின் பிள்ளைகள், அவர்கள் கடந்த பல மாதங்களாக அமைதியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒரு வன்முறை சம்பவம்கூட நடக்கவில்லை. ஆனால், அவர்கள் டெல்லிக்குச் செல்லும்போது அவர்களுக்கு எதிராக நீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. எங்கள் பெரியவர்கள் மற்றும் சகோதரர்களின் தலைப்பாகைகள் தூக்கி எறியப்பட்டால், எங்கள் விருதுகள் மற்றும் கவுரவத்துடன் நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? நாங்கள் எங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதனால்தான் விருதுகளை திருப்பித் தருகிறோம்"என்று தெரிவித்தார்.

;