india

img

தில்லிக்குள் நுழைய விவசாயிகளுக்கு அனுமதி.... பணிந்தது பாஜக அரசு...

புதுதில்லி:
தில்லிக்கு வரும் விவசாயிகளை, உள்ளே நுழைய அனுமதிக்கக்கூடாது என்றுஉத்தரப்பிரதேசம், அரியானா எல்லைகளில் கடுமையான முறையில் காவல்துறையினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், கண்ணீர்புகைக் குண்டுகள் மற்றும் வாட்டர் கேனன்கள் மூலமாக குளிர்நீரை பீய்ச்சி அடித்தபோதிலும் எதற்கும் கலங்காது, துணிச்சலுடன் முன்னேறிய விவசாயிகளை எதுவும் செய்ய இயலாமல் கடைசியில் மத்திய பாஜக அரசு அவர்களைத் தில்லிக்குள் விடுவதற்கும், போராரியில் உள்ள நிரங்காரி  மைதானத்தில் கூடுவதற்கும் அனுமதித்து உள்ளது.

பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப் மற்றும் அரியானாவிலிருந்து தில்லி எல்லையில் வெள்ளிக்கிழமை காலை வந்து சேர்ந்தனர். இவர்களைத் தில்லிக்குள் நுழையக்கூடாது என்று ஆர்எஸ்எஸ் - பாஜக அரசாங்கம் வாட்டர் கேனன்கள் மூலமாக குளிர்ந்தநீரை இவர்கள் மீது பீய்ச்சி அடித்தபோதிலும், கண்ணீர்ப் புகைக்குண்டுகள் மூலம் சுட்டபோதிலும் அவற்றைத் துச்சமெனத் தூக்கிஎறிந்து விவசாயிகள் முன்னேறினர். விவசாயிகள் வாகனங்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கமே சாலைகளில் பள்ளம் தோண்டி வைத்திருந்தது. உண்மையில் இதன்மூலம் அரசாங்கம்தான் வீழ்ந்துள்ளது என்று ஓர் ஊடகம் தன் செய்தியில் தெரிவித்துள்ளது.

அரியானா விவசாயிகள் ஏற்கனவே பஞ்சாப் விவசாயிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர். லட்சக்கணக்கான அளவில் அவர்கள் தில்லியை நோக்கி வரத்தொடங்கினர். இதேபோன்று உத்தரப்பிரதேசத்தி லிருந்தும் இதர மாநிலங்களிலிருந்தும் விவ சாயிகள் வந்துள்ளனர்.உத்தரப்பிரதேசத்தில் ஹாபூரிலும், தில்லி - மொராதாபாத் நெடுஞ்சாலையில் பகர்பூர் சுங்கச்சாவடியிலும் மற்றும் முசாபர்நகர், சம்பால், ராம்பூர் ஆகிய இடங்களிலும் தில்லிக்கு வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப் பட்டனர்.மத்திய அரசின் கட்டளைக்கிணங்க, பாஜக மாநில அரசாங்கங்கள் இவ்வாறு விவசாயி களைத் தடுத்து நிறுத்தியதை பல்வேறு அமைப்புகள் கடுமையாகக் கண்டித்தன. அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. தில்லி வரும் விவசாயிகளை அனுமதித்திட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டது.

விவசாயிகளை தில்லிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை காலை பல தொழிற்சங்கங்கள், மாணவர், மாதர் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் சார்பில் நாடாளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.இவற்றின் பின்னணியில் மத்திய அரசு, விவசாயிகளை தில்லிக்குள் வருவதற்கு இறுதியாக அனுமதித்தது. வெள்ளி மாலை நிலவரப்படி - நிரங்காரி மைதானத்தில் அவர்கள் அணிதிரண்டுகொண்டிருந்தார்கள்.

நடந்தது என்ன?
முன்னதாக கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் வியாழனன்று தில்லியை நோக்கி பேரணியாகச் சென்றனர். மாநில எல்லைகளில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தண்ணீர் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் விவசாயிகள் பின்வாங்கா மல் வியாழனன்று இரவு முழுவதும் நெடுஞ்சாலைகளிலேயே முகாமிட்டனர்.தில்லி எல்லையிலிருந்து தில்லி-அம்பாலா நெடுஞ்சாலையில் 65 கி.மீ தூரத்தில் உள்ள பானிபட் டோல் பிளாசாவில் அரியானா விவசாயிகளும், அதே நெடுஞ்சாலையில் தில்லி எல்லையிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள கர்னாலில் பஞ்சாப் விவசாயிகளும் முகாமிட்டனர்.

மற்றொரு பகுதியில் ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையில் வந்த விவசாயிகளை குர்கானில்உள்ள பிலாஸ்பூர் கிராமத்தில் காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர்.தில்லியின் பல திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி பேரணியாக வந்தனர். இவர்கள் தில்லியை முற்றுகையிடும் வகையில் டிராக்டர்கள், லாரிகள், ஜீப்புகளில் உணவு சமைக்க தேவையான பொருட்கள், படுக்கைகள் என அணிவகுத்து வந்தனர். இந்நிலையில் போராட்டத்தின் உக்கிரத்தை உணர்ந்த மத்திய விவசாயத் துறைஅமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரச்சனைகள் மற்றும் வேறுபாடுகளைத் தீர்க்க அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளது. கிளர்ச்சி செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். நமது பேச்சுவார்த்தை நேர்மறையான முடிவைக் கொடுக்கும் என நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். 

போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும்படி வேண்டுகோள் விடுக்கிறேன் என்றுமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறினார். அமைச்சர்கள் இப்படி பேசினாலும் கடந்த இரு நாட்களில் 90 விவசாயிகள் சங்கத் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.பேரணியாக வந்துகொண்டிருந்த விவசாயிகள்மீது கண்மூடித்தனமான முறையில்கண்ணீர்புகைக் குண்டுகளும், நீர்பீய்ச்சி அடிக்கும் வாட்டர்கேனன்களும் பயன்படுத்தப்பட்டன. எண்ணற்ற விவசாயிகள் காயங்கள் அடைந்தனர். இவ்வாறு மத்திய அரசும், பலமாநில அரசுகளும் அவர்களின் காவல்துறையும் போராட்டத்தை முடக்க முயற்சிகள் மேற்கொண்டபோதிலும் அவற்றையெல்லாம் மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி அணிதிரண்டு வந்திருக் கிறார்கள். 

அகில இந்திய தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தில்லிக்கு வரும் விவசாயிகள் மீது காவல்துறையினர் பல்வேறு வடிவங்களில்அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டி ருப்பதற்கு, சிஐடியு மற்றும் அகில இந்தியவிவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இதுதொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுதும் மறியல் போராட்டம் நடத்தியுள்ள விவசாயிகளுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தன் வீர வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. விவசாயிகள், ஒருபக்கத்தில்காவல்துறையினரின் அட்டூழியங்களையும்,  அதேபோன்று தங்கள்மீது பீய்ச்சி அடிக்கப்பட்ட குளிர்ந்த தண்ணீரையும் துணிவுடன் எதிர்கொண்டு முன்னேறியிருக் கின்றனர். பஞ்சாப் - அரியானா மற்றும் உத்தரப்பிரதேச எல்லைகளில் தங்கள்மீது ஏவப்பட்ட அனைத்துத் தடைகளையும் தகர்த்து தில்லிக்குள் அவர்கள் நுழைந்திருக்கின்றனர்.கடும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, பல்வேறு சங்கங்களின் சார்பில் தில்லி, நாடாளுமன்ற வீதியில் கிளர்ச்சி ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சந்திர சேகர் கோடிஹள்ளி, பிரேம்சிங் கேலாவாத், கவிதா குருகந்தி, ஹன்னன்முல்லா, பி.கிருஷ்ண பிரசாத், சிஐடியு சார்பில் தபன்சென், டாக்டர் கே.ஹேமலதா, ஏ.ஆர். சிந்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் விக்ரம் சிங், முதலானவர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹன்னன்முல்லாவும், தபன்சென்னும் உரையாற்றினார்கள்.(ந.நி.)

;