india

img

மன்னிப்பு கோரிய விளம்பரங்களின் அசலை தாக்கல் செய்ய பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தவறான விளம்பரம் கொடுத்த வழக்கில் பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் நாளிதழில் மன்னிப்பு கோரிய விளம்பரத்தின் அசலை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவறான விளம்பரம் செய்த வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து மன்னிப்பு கோரி நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களின் நகல்களை பாபா ராம்தேவ் தரப்பில் நீதிபதிகள் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், விளம்பரங்களின் இ-பேப்பர்களையும், கட்டிங்களையும் ஏற்க முடியாது எனவும், அனைத்து நாளிதழ்களின் அசல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில், உத்தரகண்ட் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துக்கு மறுப்பு தெரிவித்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முன்பும், பின்பும் பதஞ்சலி நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையாகத் திருத்தி தாக்கல் செய்ய 10 நாள்கள் அவகாசம் அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் பதஞ்சலி வழக்கில் உச்சநீதிமன்றம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் விமர்சித்தற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் அடுத்த விசாரணைக்குப் பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தனர்.

;