india

img

ஆன்லைன் சூதாட்ட தடை - மாநில அரசுக்கே அதிகாரம்

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்று மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை அடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், அவசர தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இது தொடர்பான நிரந்தர சட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசிடம் சில விளக்கங்களைக் கேட்டுக்கொண்டார். எனினும் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், இத்தகைய மசோதா மத்திய அரசு வரம்பில் வருவதால், அதை மாநில அரசு நிறைவேற்றுவது முரணானதாக இருக்கும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருக்கிறார்.

இந்த நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. பார்த்திபன் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்த ஒன்றிய தகவல், ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாகூர் ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

;