india

img

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் (66) கடந்த  2011-ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.  இவர் பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகள், புதிதாக பயிற்சிக்கு சேரும் சிறுமிகள், பெண் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருக்கமாக இருக்கும் சில பயிற்சியாளர்களுக்கும் பாலியல் தொல்லை, மனதளவில் நெருக்கடி அளித்ததாகவும் இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகத் குற்றம்சாட்டினார்.  வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தில்லி ஜந்தர் மந்தரில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக 150-க்கும்  மேற்பட்ட மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். 
பாலியல் தொல்லை குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் விசாரணை மேற்கொள்ள வேண்டும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மல்யுத்த போராட்டக் குழு முன்வைத்திருந்தது. 
இதை அடுத்து, 3 மாதங்கள் ஆகியும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்பட 8 மல்யுத்த வீரர் வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
 

;