india

img

பாஜக-வுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் துரோகிகளாம்..- கார்நாடக பாஜக அமைச்சர் பேச்சு

பாஜக-வுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் துரோகிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள் என கர்நாடக பா.ஜ.க அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். பெங்களூருவில் கடந்த 15-ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ஒரு தேசபக்தி உள்ள இஸ்லாமியர் பாஜகவுக்கு தான் வாக்களிப்பார். ஆனால்  பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள் மற்றும் துரோகிகள் பாஜகவுக்கு வாக்களிக்க தயங்குவார்கள்” என்றார்.

மேலும், பேசிய அவர், ”நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள், இதனால் அவர்களுக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்று பயந்தனர்.  அவர்கள் ஆண்மையற்றவர்கள். என் தொகுதியில், 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் உள்ளனர். இதுவரை அவர்களுள் ஒருவரிடமும் ஒருபோதும் வாக்கு கேட்கவில்லை” என்று தெரிவித்தார்.

ஈஸ்வரப்பா, சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர். முன்னதாக நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில், இஸ்லாமியர்கள் பாஜகவின் வேட்பாளராக நிற்பதற்கு பாஜக அலுவலகத்தை 10 ஆண்டுகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் அவர் பேசினார். அவரின் இதுபோன்ற பேச்சுகள் தொடர்ந்து சிறுபான்மையினர் மக்களுக்கு எதிராக உள்ளது என பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 

;