india

img

இந்திய மாணவர்கள் வாழ்க்கையை சீரழித்த மோடி அரசு

“தேசிய தேர்வு முகமையானது (NTA) 2018-இல் தேர்வுகளை நடத்துவதற்கான பொறுப்பினை ஏற்றது. தினமும் மூன்று லட்சம் தேர்வுகளை நடத்தும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய தேர்வு முகமைகளில் ஒன்றாக மாறியது. இந்த தேர்வு முகமையின் மூலம், நீட் (NEET), கியூட் (CUET), யுஜிசி-நெட் (UGC-NET), சி மேட் (CMAT), ஜி பேட் (GPAT), ஸ்வயம் (SWAYAM) மற்றும் பிற குறிப்பிடத்தக்க தேர்வுகளுக்காக ஏறத்தாழ 13 மில்லியன் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதன் செயல்பாடுகளுக்கான ஆரம்ப நிதியாக முதல் வருடம் ரூ. 25 கோடியும், 2023 ம் வருடம் ரூ. 35 கோடியும் ஒதுக்க ஒன்றிய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்தது. இந்த 6 ஆண்டுகளில் முறைகேடுகள் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் போன்றவை இந்த முகமை நடத்திய 12 தேர்வுகளை சிதைத்துள்ளன. நீட் (NEET) மற்றும் யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வுகளில்  நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. இதுபற்றிய விமர்சனங்கள் எழுந்த நிலையில், தேசிய தேர்வு முகமையானது, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் 2018-இல் பதிவு செய்யப்பட்ட சொசைட்டி என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடியிருப்போர் நலச் சங்கங்களைப் போன்ற ஒன்றென தெரியவந்துள்ளது. இது கல்வி அமைச்சகத்தின் கீழான ஒரு தன்னாட்சி மற்றும் தன்னிறைவு மிக்க தேர்வு முகமை என்றும், பத்து பேர் கொண்ட  நிர்வாகக் குழு தேசிய தேர்வு முகமையை வழி நடத்துகிறது என்று கூறுகிறார்கள்; ஆனால், இதற்கென ஒரு பொதுக்குழு என்பது இல்லை என்பது கேலிக் கூத்தாக உள்ளது. அதுமட்டுமல்ல இந்த முகமையை எந்தவொரு நாடாளுமன்ற சட்டமும் நிர்வகிக்கவில்லை, மேலும் இது அரசு ஊழியர்களின் நடத்தையை நிர்வகிக்கும் விதிகளுக்கு உட்பட்டதாகவும் இல்லை. தேசிய தேர்வுகள் முகமையானது, பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதைத் தவிர்க்கவும், ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் தண்டிக்கப்படாமல் தப்பிக்கவும் வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தச் சூழலில் தான், லட்சக்கணக்கான அப்பாவி மாணவர்கள்  ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் பொறுப்பற்ற தேசிய தேர்வு முகமை 2018 முதல் நடத்திவரும் தேர்வுகளில் நம்பிக்கை வைத்து, தங்களின் வாழ்க்கையை சிதைத்துக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தாக வேண்டும்” என்று திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார்.