india

img

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் சமூக வலைதளங்களை பின்தொடர மத்திய அரசு முடிவு

நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அவற்றின் மாணவர்களின் சமூகவலைத்தளக் கணக்குகளை பின்தொடர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அவற்றின் மாணவர்களின் சமூகவலைத்தளக் கணக்குகளையும் மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் இணைக்கக் கோரிய உத்தரவை சுமார் 900 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40,000 கல்லூரிகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் உயர் கல்வி பிரிவு அனுப்பி உள்ளது. இத்துறைக்கு சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் கணக்கு ஏற்கெனவே துவங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அவற்றின் மாணவர்களின் கணக்குகளை சேர்ப்பதால் அதில் பதிவாகும் நற்பணிகள் பற்றி அரசு அறிய விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

கணக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கல்வி நிறுவனம் பற்றிய நல்ல செய்திகளை வாரத்தில் ஒன்றாவது பதிவிடச் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. கணக்கு இல்லாதவர்கள் தொடங்க வேண்டியது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை ஜூலை 31 ஆம் தேதிக்கு முன்பாக இணைக்க வேண்டும் எனவும் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

 இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு கல்வி நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. மேலும், மாணவர்களின் கணக்குகள் இணைக்கும் பட்சத்தில், மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதும், மாணவர்களின் சுதந்திரமான சிந்தனையில் மத்திய அரசு தலையிடுவது போன்ற வாய்ப்புகள் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

;