india

img

ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகளை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் மத்தியத்தொகுப்புக்கு எடுத்துக்கொள்வதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு

ஒன்றிய அரசு, மாநிலங்களில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்தியத்தொகுப்புக்கு எடுத்துக்கொள்வதற்கு மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று இப்போதிருந்துவரும் விதியை ரத்து செய்திட ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதற்கு கேரளம் உட்பட ஆறு மாநில அரசாங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஜனவரி 12 அன்று மாநில அரசாங்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதன்படி தற்போது 1954 ஐஏஎஸ்(ஊழியர்)விதிகளில் 6 ஆவது விதியின்கீழ் மாநில அரசுகளில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசு தன் மத்தியத் தொகுப்புக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் அவர் பணிபுரியும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்த விதியை ரத்து செய்திடலாமா என அக்கடிதத்தில் கேட்கப்பட்டிருக்கிறது.

இதற்கு கேரளம் உட்பட ஆறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

கேரள சட்ட அமைச்சரான பி.ராஜீவ், இது கூட்டாட்சித் தத்துவத்தின் முக்கியமான குறிக்கோளையே தகர்த்திடும் என்றும் எனவே இதனை தங்கள் அரசு எதிர்க்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு விரிவான பதிலைத் தாங்கள் அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேபோன்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான திருத்தம் என்று கூறி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதேபோன்று தமிழகம் உட்பட மேலும் நான்கு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது. 

;