india

பாஜகவின் வகுப்புவாத-பிளவுவாதக் கொள்கைகளால் 2023-ல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு

பாஜக-வின் பிளவுவாத, வகுப்புவாதக் கொள்கைகளால் 2023-ஆம் ஆண்டில்வன்முறை, மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் உலகளாவிய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது பாஜகவின் பாரபட்சமான மற்றும் பிளவு படுத்தும் கொள்கைகளால் சிறுபான்மை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எதி ரான வன்முறை அதிகரித்துள்ளது.

இது  நாட்டின் மதச்சார்பின்மையை கேள்விக்குறி யாக்கியுள்ளது. பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது உலக அறிக்கையில்  தெரிவித்துள்ளது. மோடி அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும்  பாரபட்சமான அணுகுமுறை நாட்டின்  உலக ளாவிய தலைமைத்துவ நடவடிக்கைகளை குறை மதிப்பிற்கு உட்படுத்தியது. தவறு செய்தவர்களை கண்டறிந்து நட வடிக்கை எடுத்துத் தண்டிப்பதற்குப் பதிலாக, வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இதை எதிர்த்து கேள்வி  கேட்டவர்கள், கேள்வி கேட்பவர்கள் துன்புறுத்தப் பட்டனர் என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை (ஆசியா) இயக்குநர் மீனாட்சி கங்குலி.  2024-ஆம் ஆண்டின் உலக அளவிலான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 740-பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித  உரிமை நடைமுறைகளை மதிப்பாய்வு செய்துள்ளது

சட்டத்தைப் பயன்படுத்தி துன்புறுத்தல்
இந்திய அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் வீடுகளில் சோதனைகள், நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பெயரில் துன்புறுத்தப்பட்டார்கள். அல்லது அரசு சாரா நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவியை ஒழுங்குபடுத்தும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டத்தைப் பயன்படுத்தி துன்புறுத்தி னார்கள். கடந்த 2002-இல் நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி சமீபத்தில் வெளியிட்டது.

கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதுபோல அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பிபிசியின் தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப விதி களின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன் படுத்தி, இந்தியாவில் பிபிசி-யின் ஆவணப் படத்தை மோடி அரசு தடுத்தது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத-பிற சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சமான நடைமுறைகளை எடுத்துக்காட்டும் பல நிகழ்வுகளை உலக நாடுகளின் மனித உரிமை அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில்  பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை, ஹரியானா மாநிலம்  நூஹ் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை,  மணிப்பூர் மோதல், ஜம்மு-காஷ்மீரில் கருத்துச் சுதந்திரம் பறிப்பு, பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் பாலியல் விவகாரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

பஞ்சாப்-ஹரியானா  உயர்நீதிமன்றங்கள் கேள்வி
 2023-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி  ஹரியானா மாநிலம்  நூஹ் மாவட்டத்தில் இந்துக்கள் நடத்திய ஊர்வலத்தில் வகுப்புவாத வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்குக் காரணம் முஸ்லிம்கள் என குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் கலவரம் தில்லி, இராஜஸ்தான் உள்ளிட்ட ஹரியானாவை ஒட்டியுள்ள பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது.  இந்த வன்முறையைத் தொடர்ந்து,  நூஹ் மாவட்டம் டாரு நகரில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி 354 நபர்களின் 443 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

இவர்களில் 71 பேர் இந்துக்கள்.  283 பேர் முஸ்லிம்கள் என  நூஹ்வில் உள்ள மக்கள் தொகையில் 80 சதவீதம் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நூஹ் வன்முறையில் ஆறு பேர் கொல்லப் பட்டனர், 176 பேர் கைது செய்யப்பட்டனர்.  நூற்றுக் கணக்கான முஸ்லிம் சிறுவர்களையும், ஆண்களையும் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்த அதிகாரிகள் அவர்களைப் பழி வாங்கினார்கள். மோதல் தொடர்பாக 93 முதல் தக வலறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இந்த நடவடிக்கைகளைப் பார்த்த பஞ்சாப், ஹரியானா  உயர் நீதிமன்றங்கள் பாஜக தலைமை யிலான மாநில அரசு “இன அழிப்பு” நடத்துகிறதா? என்று கேட்குமளவிற்கு நிலைமை மோசமானது.

2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் மெய்டெய், குக்கி சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அம் மாநில  பாஜக முதல்வர் என்.பைரன் சிங், குக்கிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை மோசமாக இருந்தது.  2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் சபையின் பத்து வல்லுநர்கள் மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். ஒன்றிய அரசின் பதிலும் நடவடிக்கையும் மிகவும் மெதுவாகவும் போதுமானதாகவும் இல்லை என்று அந்தக்குழு சுட்டிக்காட்டியது.

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு- காஷ்மீரில் கருத்துச் சுதந்திரம், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இந்திய அதிகாரிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகின்றனர்.  பாதுகாப்புப் படையினரால் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் ஆண்டு முழுவதும் தொடர்ந்துள்ளன. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சிங், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்தபோது, ​​குறைந்தது ஆறு பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தப் பிரச்சனை யில் நீதிக்காக போராடிய, ​​ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்தனர்.

தி வயர் இணையதள தகவல்களுடன்