india

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் போரை நிறுத்த ஐ.நா. தீர்மானம்

புதுதில்லி, டிச.9- இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்  என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 13 உறுப்பி னர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில், அமெரிக்கா தனக்குள்ள ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த தீர்மானத்தை நிராகரித்தது.

இஸ்ரேலின் கடும் குண்டுவீச்சுக்கு மத்தி யில், பாதுகாப்பான வீடுகள் இன்றி, வாழத்  தேவையான பொருட்களின்றி, விரக்தி யான சூழல் நிலவும் கட்டத்தில்- பாலஸ்தீ னத்தின் காசா பகுதியில் மிக விரைவில் பொது ஒழுங்கு உருக்குலையும் என ஆபத்து உள்ளது. இங்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டுசேர்ப்பது கூட இயலாத காரியமாக இருப்பதால், இது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகமோசமான அச்சுறுத்தலாக மாறும் சூழல் உள்ளது. எனவே, இந்த பிரச்சனை யில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உரிய கவனம் செலுத்தி போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ட ரெஸ் தீர்மானம் கொண்டு வந்தார்.

வழக்கமாக உறுப்பு நாடுகள்தான் தீர்மானம் கொண்டுவரும் என்ற நிலையில், இந்தமுறை ஐ.நா. பொதுச்செயலாளரே,  ஐ.நா. சாசனத்தின் பிரிவு 99 மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தானாகவே முன்வந்து தீர்மானம் கொண்டுவந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது ஐ.நா. பாது காப்புக் கவுன்சிலில் வாக்கெடுப்பு நடை பெற்றது. 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட  பாதுகாப்புக் கவுன்சிலில், தீர்மானத்திற்கு 13 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்ததால்,  ஐ.நா. பொதுச்செயலாளர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது. ஏனைய 2 நாடு களில் இங்கிலாந்து இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. ஆனால், அமெரிக்கா இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்ததுடன், தனக்குள்ள வீட்டோ  அதிகாரத்தைப் பயன்படுத்தி, தீர்மானத்தை தடுத்து நிறுத்தியது.

“போர் நிறுத்தம் மற்றொரு போரையே  உருவாக்கும் என்றும், பிரச்சனைக்குத் தீர்வு  காண ஹமாஸ் விரும்பவில்லை” என்றும் அமெரிக்கா வழக்கம்போல பொய்யான காரணம் ஒன்றை கூறியுள்ளது.

இஸ்ரேல் நடத்திய குண்டுமழைக்கு, காசாவில் இதுவரை 16 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவிகிதம் பேர் பெண் கள் மற்றும் குழந்தைகள். மேலும், இப் போரில் 42,000க்கும் அதிகமானோர் காய மடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.