india

img

ஜி.20 மாநாட்டை நடத்துகிறோம் என்ற பெயரில் அப்பாவி ஏழைகளை வெளியேற்றி, வன்முறையை ஏவாதீர்கள் - பிரஜைகள் குழு அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

புதுதில்லி, மே 23- ஜி.20 மாநாட்டினை நடத்துகிறோம் என்ற பெயரில் ஒன்றிய அரசாங்கம், தலைநகரின் பல இடங்களில் ஏழைகள் வாழும் குடியிருப்புகளை இடித்துத் தரைமட்டமாக்கியும், அவர்களை அங்கேயிருந்து வெளியேற்றியும், அவர்கள் மீது வன்முறையை ஏவிவருவதற்கு முற்றுப்புள்ளிவைத்திட வேண்டும் என்று பிரஜைகள்  குழு ஒன்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜி.20 மாநாடு இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் நடைபெறுவதையொட்டி, தலைநகரின் பல இடங்களில் அடித்தட்டு மக்கள் வாழ்ந்துவந்த சேரிப்பகுதிகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு, அங்கே வாழ்ந்துவந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இதுதொடர்பாக மன உளைச்சலுக்கு ஆளான பொறுப்புமிக்க இந்தியப் பிரஜைகள் குழு ஒன்று தலைநகர் தில்லியில் உள்ள ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவனில் கூடியது. அதில் மூத்த பத்திரிகையாளர் பமீலா பிலிப்போஸ், தலித் மனித உரிமைகளுக்கான தேசியப் பிரச்சாரக்குழுவைச் சேர்ந்த பீனா பலிக்கள், சிம்லா மாநகராட்சி முன்னாள் துணை மேயர் திக்கந்தர் பன்வார், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஹர்ஷ மாந்தர் மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஆனந்த் யாக்னிக் ஆகியோரடங்கிய நடுவர் குழு மேற்கண்ட இந்தியப் பிரஜைகள் குழுவிற்குத் தலைமையேற்றுள்ளனர்.

இக்குழுவின் சார்பில் திங்கள் அன்று புதுதில்லி. ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் இவர்கள் கூறியதாவது:

“இன்று (22.5.23) காலையிலிருந்து அப்பாவி ஏழை மக்கள் குடியிருந்த இடங்களிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். நாட்டிலுள்ள சட்டங்களை மீறி அவர்கள் மீது வகைதொகையின்றி அட்டூழியங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிகிறோம். அரசமைப்புச்சட்டத்தின் நெறிமுறைகள் அனைத்தையும் மீறி இவ்வாறு அட்டூழியங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது அமிர்த காலம் என்று சொல்வதா, இல்லை ராட்சசக் காலம் என்று சொல்வதா?” என்று ஆனந்த யாக்னிக் கேட்டுள்ளார்.

ஒன்றிய அரசாங்கம், ஜி.20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவது நாட்டிற்கே பெருமை என்று சித்தரிக்கப்படக்கூடிய அதே சமயத்தில், நாட்டு மக்களை, குறிப்பாக ஏழைகளை, பாரபட்சத்துடன் நடத்துகிறது என்று நாக்பூரிலிருந்து வந்துள்ள ஜம்மு ஆனந்த் கூறினார்.

“ஒரு நகரம், தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருநாள் கூட இயங்கிட முடியாது. எனினும் தொழிலாளர்கள் வாழ்வதற்கான இடங்களை இவர்கள் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அலாவுதீனின் மந்திர விளக்கைப்போல அவர்களின் வேலைகள் தேவைப்படும்போது அவர்கள் வந்துவிட்டு, வேலைகள் முடிந்தபின்னர் காணாமல்போய்விட வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது,” என்று ஹர்ஷ் மாந்தர் கூறினார்.   

“நாங்கள் எங்கள் மூட்டை முடிச்சுகளை மூன்று மணி நேரத்திற்குள் காலி செய்துவிட வேண்டும் என்று கூறப்பட்டோம். இது சாத்தியமே கிடையாது. இதனால் பல மாணவர்கள் தங்கள் தேர்வுகளை எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஏப்ரல் 29க்கு பிறகு மூன்று தடவை எங்கள் குடியிருப்புகளின் மீது புல்டோசர்கள் வந்து எங்கள் இருப்பிடங்களை இடித்துத் தரைமட்டமாக்கியது. முதலில் எங்களுக்கு வந்துகொண்டிருந்த கை பம்புகளை உடைத்தார்கள். எனவே தண்ணீரின்றி தவித்தோம். மாணவர்கள் பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ செல்ல முடியவில்லை. இப்போது நாங்கள் பாலத்தின் கீழே வசித்துக்கொண்டிருக்கிறோம்,” என்று தில்லி, பேலா எஸ்டேட்டிலிருந்து வந்த பூஜா என்பவர் கூறினார்.

துக்ளகாபாத்தில் மக்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் கொடூரமானதாகும். பல பத்தாண்டுகளாக அங்கே வேலைபார்த்துவந்த நாங்கள் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறோம். இந்த அளவிற்கு மோசமான நிலைமையை இதுவரை நாங்கள் சந்தித்ததே இல்லை. போலீசார் எங்களைச் சுற்றி நின்றுகொண்டார்கள், அவர்கள் இடிப்பதை எங்களை வீடியோ எடுக்க அனுமதிக்கவில்லை. செயற்பாட்டாளர்களின் போன்கள் அவர்களிடமிருந்து பறித்துக்கொள்ளப்பட்டன. அருகிலிருந்த ஓட்டல்கள், கடைகள் மூடப்பட்டன. அதன் பின்னர் இரண்டு நாட்களில் எங்கள் சேரி முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டது,” என்று சுரக்ஷா மஞ்ச் சேரியிலிருந்த அப்துல் ஷகீல் கூறினார்.  

இவ்வாறு அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்துள்ள புகார்களை ஆய்வு செய்து, முழுமையாக ஓர் அறிக்கை தயாரிக்கப்படும் என்று நடுவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு ஏழை மக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கும், வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும் அவர்கள் கோரினார்கள்.

(ந.நி.)