india

img

அமித்ஷாவின் பிரச்சாரத்தின் போது சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது தாக்குதல் - வீட்டை விட்டு வெளியேற்றம்

அமித்ஷாவின் பிரச்சாரத்தின்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் கட்டியதால் 2 பெண்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் அப்பெண்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

தில்லியில் உள்ள லஜ்பத் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அங்கு வசிக்கும் இரு பெண்கள் தங்கள் வீட்டின் பால்கனியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போனர் ஒன்றை கட்டி வைத்திருந்தனர். இதை அடுத்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் சிலர், அப்பெண்கள் வசிக்கும் வீட்டின் கதவை தாக்கி, வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளனர். இந்நிலையில், இந்த இரு பெண்கள் வசித்து வந்த வாடகை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இரு பெண்களில் ஒருவரான சூர்யா ராஜப்பன், இதுகுறித்து கூறுகையில், ”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரச்சாரம் செய்கிறார் என்பதை அறிந்தவுடன், நம் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம்  நமக்கு அளித்துள்ள உரிமையின் படி, உள்துறை அமைச்சர் முன்பாக நாங்கள் இச்சட்டத்திற்கு எங்களின் எதிர்ப்பை தெரிவித்தோம். நாங்கள் வசிக்கும் வீதியில், அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டபோது, சிஏஏ, என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக பேனர் ஒன்றை எங்கள் பால்கனியில் கட்டினோம். அந்த பேனரில், "Shame; no CAA and NRC, Azaadi, #NotInMyName" என்று எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த பாஜகவினர், 150 பேர் நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின் முன் திரண்டு, தகாத முறையில் எங்களை மிரட்டினர். அவர்களில் சிலர், எங்கள் வீட்டு கதவை உடைத்து வீட்டுக்குள் வர முயன்றனர். மேலும், நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கதவையும் பூட்டி வைத்தனர். அதனால், போன் மூலம் எங்கள் நண்பர்களிடம் உதவி கேட்டு அழைத்தோம். ஆனால், அந்த கும்பல் எங்கள் நண்பர்களை உள்ளே அனுமதிக்காமல், அவர்களை தாக்கினர். இதனால் நாங்கள் 3-4 மணி நேரம் வெளியே வரமுடியாமல் உள்ளேயே இருந்தோம். இதற்கிடையில், நாங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எங்கள் வீட்டு உரிமையாளர் கூறினார். பின்னர் 7 மணி நேரத்திற்கு பிறகு, போலீசார் உதவியுடன் அந்த இடத்தைவிட்டு வெளியேறினோம்” என்று தெரிவித்தார்.
 

;