உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானி அருகே பன்பூல்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் ரயில்வே நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்த போதும் அப்பகுதியில் உள்ள மசூதி மற்றும் மதரஸாக்களை இடித்து இந்து - முஸ்லிம் மக்களிடையே வன்முறையை கட்டவிழ்த்து விட்டது அம்மாநில பாஜக அரசு. இந்த வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் தலைமையில் புதனன்று பன்பூல்பூருக்கு தூதுக்குழு சென்றது. வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்கள், கைது செய்யப்பட்டவர்கள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடம் பேசிய தூதுக்குழு, பாரபட்சமற்ற விசாரணையை நடத்த மாநில பாஜக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.