புதுதில்லி, டிச. 9 - அதானி, மணிப்பூர், சம்பல் விவ காரங்களை விவாதிக்க மறுக்கும் ஒன்றிய மோடி அரசின் பிடிவாதத் தால், நவம்பர் 25 அன்று குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்கிய நாளி லிருந்து கடந்த 10 நாட்களும் நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் முறை யாக நடைபெறவில்லை.
இந்தியாவில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிர்மான நிறுவன அதிகாரி களுக்கு 265 மில்லியன் டாலா் லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரு கின்றன. இதேபோல ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் மணிப்பூர் மாநில வன்முறை, கடந்த வாரம் உ.பி. மாநிலம் சம்பலில் 5 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது தொடர்பாகவும் விவாதம் நடத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஆனால், இப்பிரச்சனைகளை விவாதிக்க முடியாது என்று மோடி அரசு பிடி வாதமாக உள்ளது. இதனைக் கண்டித்து, நவம்பர் 25 அன்று குளிர் காலக் கூட்டத்தொடர் துவங்கியது முதலே, ‘அதானியும் - மோடியும் ஒன்று தான்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கே வராமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.
மாறாக, அதானி ஊழலில் எதிர்க் கட்சிகள் பிரதமர் மோடியைக் குற்றம் சாட்டுவதால், ஏட்டிக்குப்போட்டியாக ஹங்கேரி - அமெரிக்க தொழிலதிபரான ஜார்ஜ் சோரஸ் நிதியளிக்கும் அமைப்புகளுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பு உள்ளதாக பாஜக ஒரு குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் கிளப்பி விட்டுள்ளது. அதானி விவா தத்திற்கு மறுக்கும் மோடி அரசு, ஜார்ஜ் சோரஸ் விவகாரத்தில் மட்டும் டிசம்பர் 13, 14 தேதிகளில் மக்களவையிலும், டிசம்பர் 16, 17 தேதிகளில் மாநிலங் களவையிலும் விவாதம் நடத்தத் தயார் என்று அறிவித்துள்ளது.
இதனிடையே, திங்களன்று 10-ஆவது நாளாக நாடாளுமன்றம் கூடி யது. அப்போது, எதிர்க்கட்சிகள் வழக்கம்போல அதானி விவகாரத்தை கிளப்பி, முழக்கங்களை எழுப்பினர். இதனால், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் முதலில் பகல் 12 மணி வரையும், பின்னர் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
எனினும் நாடாளுமன்றம் முன்பு கூடிய, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், அதானி - மோடி முகமூடிகளை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘மோடியும் அதானியும் ஒன்றுதான்’; ‘எங்களுக்கு நியாயம் வேண்டும்’ என்றும், மணிப்பூர் வன்முறை, சம்பல் துப்பாக்கிச்சூடு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.