india

img

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைத்திட வேண்டும் - மக்களவையில் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

புதுதில்லி, மார்ச் 15- கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட தனி ரயில்வே கோட்டம் அமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடந்து கொண்டிருக்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) ரயில்வே அமைச்சகத்தின் மான்யங்கள் மீதான பொது விவாதத்தில் பங்கேற்று பி.ஆர்.நடராஜன் பேசியதாவது:
கோவையில் உள்ள தொழில் அமைப்புகளும், 180 மக்கள் அமைப்புகளும் இணைந்து, தற்போது பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரயில் நிலையங்களையும் சேர்த்து தனி ரயில்வே கோட்டம் அமைக்கக் கோரி வருகின்றோம். முன்பு சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டபோது, கோவைக்குத் தனி ரயில்வே கோட்டம் கோரியது ரயில்வே நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. போத்தனூர் மற்றும் பொள்ளாச்சிக்கு இடையே சுமார் 250 கோடி ரூபாய் செலவினத்துடன் அகல ரயில் பாதைப் பணிகளும், மின்மயமாக்கல் பணிகளும் முடிவடைந்தபின்னரும், கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பயணிகள் போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படாத நிலை தொடர்கிறது. கோவை மக்களும், தென் மாவட்ட மக்களும் புனித யாத்திரை, வர்த்தகம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவற்றிற்காக தங்கள் பயணங்களை ரயில்மூலம் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர்.

எனவே, சேலம் ரயில்வே கோட்டத்திலிருந்து, கோவை ரயில்வே கோட்டத்தைத் தனியாகப் பிரித்துச் செயல்பட வைப்பது இன்றைய கட்டாயத் தேவையாகும். இதற்காக இந்த பட்ஜெட்டில் போதுமான அளவிற்குத் தொகையை ஒதுக்கி, கோவை ரயில்வே கோட்டம் விரைவாக அமைந்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.

(ந.நி.) 

;