india

img

ஐஐடி ரூர்கியில் 18 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன: ஆர்.டி.ஐ தகவல் 

நடப்பு கல்வியாண்டில் ஐஐடி ரூர்கியில் 18 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஐடி கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான போட்டி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர், இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நாடு முழுவதிலும் உள்ள ஐஐடிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதா? இல்லையெனில் அதை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஐஐடி ரூர்கி கல்வி விவகாரங்கள் அலுவலகம், ஜூலை 20-ஆம் தேதியில் இருந்து ஜூலை 31 வரை சேர்க்கைக்கான தேதியை நீட்டித்த பிறகும், இளங்கலைப் படிப்பில் 18 இடங்கள் இன்னும் காலியாகவே இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் உள்ள 23 ஐஐடிகளில் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்கள் குறித்து எந்தக் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு சந்திரசேகர் கவுர் தாக்கல் செய்திருந்த ஆர்டிஐ மனுவில், 2017-18 ஆம் கல்வியாண்டில் பல்வேறு ஐஐடிகளில் 119 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

;