india

img

வரலாறு படைத்த விவசாயிகள்.... குடியரசுத் தினத்தன்று பேரெழுச்சியுடன் நடைபெற்ற டிராக்டர் பேரணிகள்....

புதுதில்லி:
குடியரசு தினத்தன்று விவசாயிகளின் உரிமைக்கான போராட்டத்தின் பகுதியாக நடந்த உழவர் அணிவகுப்பை தடுத்த காவல்துறையினர் டிராக்டர்களை தாக்கியதுடன் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகை குண்டு வீச்சு என பெரும் அராஜகத்தை அரங்கேற்றினர். துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். தில்லி காவல்துறையினர் பதிவு செய்துள்ள 22 வழக்குகளில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயி பெயரும் இடம்பெற்றுள்ளது.

குடியரசு தினத்தன்று தில்லியில் இந்திய நாடு கண்டிராத விவசாயிகளின் மாபெரும் டிராக்டர் அணிவகுப்பு நடந்தது. நாடுமுழு வதிலிருந்தும் திரண்ட லட்சக்கணக் கான விவசாயிகளுடன் மாணவர்களும் தொழிலாளர்களும் பொதுமக்களும் கைகோர்த்தனர். அமைதியான முறையில் நடந்த பேரணியை  தடுப்புகளை வைத்து சீர்குலைக்க காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். தில்ஷாத் கார்டனில் தடுப்புகளை அகற்றி முன்னேற விவசாயிகள் முயன்றனர். அப்போது  அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் தடியடியும் கண்ணீர் புகை குண்டுகளும் வீசி கலைக்க முயன்றனர். பலர் காயமடைந்தனர். டிராக்டர்களின் டயர்களில் காவல்துறையினர் காற்றை பிடுங்கிவிட்டனர். சாலையில் இருந்து அகற்ற முடியாத வகையில் வாகனங்களை காவல்துறையினர் சேதப்படுத்தினர்.

இதற்கிடையில், சிங்குவிலிருந்து வந்த விவசாயிகள் ஹரியானா எல்லையான கர்னாலை அடைந்தனர். அவர்கள்தடுப்புகளை உடைத்து ஜிடி சாலையைஅடைந்தனர். டிராக்டர் அணிவகுப்பு பிரகதி மைதானம் மற்றும் ராஜ்காட்டை அடைந்தது.

இணையத் தொடர்பு துண்டிப்பு
விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தேசிய தலைநகரின் பல பகுதிகளில் இணையதளத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விவசாயிகள் மீண்டும் செங்கோட்டைக்குள் நுழைந்து உழவர் அமைப்புகளின் கொடிகளை மிக உயரமான கட்டிடத்தில் ஏற்றினர். நிலைமை கட்டுக்கடங்காததால் மத்திய அரசு உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.கூட்டத்தில் அமித் ஷா மற்றும் மத்திய உள்துறை செயலாளர் கலந்து கொண்டனர்.குடியரசு தினத்தன்று மதியம் முதல் 12 மணி நேரம் தில்லியில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாலை5 மணி வரை பேரணி நடத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காலையில், சிங்கு எல்லை மற்றும் திக்ரி எல்லையில் காவல்துறையினரின் தடுப்புகளை போராட்டக்காரர்கள் உடைத்து எறிந்தனர். பின்னர், காஸிப்பூரிலும் மோதல்கள் ஏற்பட்டன. தடுப்பை அகற்றிவிட்டு விவசாயிகள் முன்னேறியபோது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இருவர் பலி; 6 டிராக்டர்கள் சேதம்
தில்லி ஐ.டி.ஓவில் காவல்துறை யினர் நடத்திய தாக்குதலில் இரண்டு விவசாயிகள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் ஒரு விவசாயி கொல்லப்பட்டதாகவும், ஒரு டிராக்டர் கவிழ்ந்ததில் மற்றொருவர் இறந்ததாகவும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஆறு டிராக்டர்கள் சேதமடைந்தன, இரண்டு விவசாயிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

தலைவர்கள் தலையீடு
டிராக்டர்களில் விவசாயிகள் அணிவகுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னர், ஹரியானா காவல்துறையினர் கான்கிரீட் கட்டைகள், லாரிகள், கண்டெய்னர்களுடன் சாலையைத் தடுத்து பேரணியை சீர்குலைக்க முயன்றனர். எல்லா இடங்களிலும் அணிவகுப்பை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஷாஜகான்பூர் உட்படவிவசாயிகள் அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் காவல்துறையினரின் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஷாஜகான்பூரில் டிராக்டர்பேரணியைத் தடுக்க காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளை விவசாயிகள் சங்கத் தலைவர்களான கே.கே.ராகேஷ், விஜு கிருஷ்ணன் தலைமையிலான விவசாயிகள் தகர்த்து டிராக்டர்கள் முன்னேறிச் செல்ல வழிவகுத்தனர்.

தடை உத்தரவு
விவசாயிகள் போராட்டத்தை யொட்டி தில்லி செங்கோட்டை நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. 

பாஜக சதி
இதனிடையே விவசாயிகள் போர்வையில் வந்த ஒரு குழுவினர், அனுமதிக்கப்பட்ட பாதையில்செல்லாமல் திடீரென தில்லி செங்கோட்டையை நோக்கி சென்று உள்ளே புகுந்தது. அந்தக் கும்பலுக்கு தலைமையேற்று செங்கோட்டையில் கொடி கட்டியவர் பாஜக ஆதரவாளரான தீப் சித்து என்பது அம்பலமாகி உள்ளது. இவர் 2019 இல் பாஜகவின் பஞ்சாப் மாநில தலைவர் சன்னி தியோலுக்கு தேர்தல் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.கே.ராகேஷ் கூறுகையில், விவசாயிகள் கடந்த 60 நாட்களாக நடத்தி வரும் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க திட்டமிட்ட முயற்சிகள் நடந்துள்ளன. அது குறித்து போராட்டக்குழு பரிசீலிக்கும். விவசாயிகள் நடத்திய போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியதை திசைதிருப்ப ஊடகங்கள் முயன்று வருகின்றன. மாணவர்களும் பொதுமக்களும் விவசாயிகளுடன் இணைந்து நடத்திய போராட்டத்தை இருட்டடிப்பு செய்து, ங்கோட்டையில் நடந்த சம்பவத்தையே ஊடகங்கள் முன்னிலைப்படுத்தின என்றார். 

படக்குறிப்பு : டிராக்டர் பேரணியில் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்கள் ஹன்னன் முல்லா, கிருஷ்ண பிரசாத் உள்ளிட்டோரும், சிஐடியு தலைவர்கள் தபன்சென், டாக்டர் ஹேமலதா உள்ளிட்டோரும் பங்கேற்ற காட்சி.

;