தில்லியில், குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணிமகத்தான மற்றும் நிகரற்ற வெகுஜனநடவடிக்கையாக இருந்தது. லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இத்தகையதொரு தீவிரமான கிளர்ச்சிப் போராட்டத்தை நாட்டின் தலைநகர் இதற்குமுன்னெப்போதும் பார்த்ததில்லை. இதற்கு முன் தலைநகர் இதைவிடப் பிரம்மாண்டமான பேரணிகளைக் கண்டிருக்கிறது என்றபோதிலும், மிகப்பெரிய அளவில், மக்களின் கிளர்ச்சிப் போராட்டத்துடனான பேரணி இதுபோன்று முன்னெப்போதும் நடந்ததில்லை.
தலைநகர் தில்லியை நோக்கி வரும் சாலைகளில் சிங்கூ, திக்ரி மற்றும் காசிபூர் எல்லைகளிலிருந்து வருவதற்கு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருந்த பாதைகளில் பேரணிக்குவந்த டிராக்டர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கை அளவிடற்கரியதாக அமைந்திருந்தது. எனினும், தவறாக வழிநடத்தப்பட்ட ஒருசில சக்திகள், இந்தப் பாதைகளிலிருந்து விலகி, ரிங் ரோடு வழியே செங்கோட்டைக்கு சென்றிருக்கின்றன. செங்கோட்டையில் கல்சா கொடியை ஏற்றியது ஓர் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகும். இவ்வாறு ரிங் ரோடு வழியாக செங்கோட்டைக்குச் செல்லஅழைப்புவிடுத்த “கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் சமிதி” என்னும் அமைப்பு, போராட்டத்தை நடத்தி வந்த “சம்யுக்த கிசான் மோச்சா” என்னும் அனைத்து விவசாய சங்கங்களில் அங்கம் வகிக்கும் விவசாய சங்கம் அல்ல.
கொச்சைப்படுத்தும் முயற்சி
இத்தகு குறிப்பிடத்தக்க மாபெரும் மக்கள் அணிவகுப்பையும் அமைதியான கிளர்ச்சி நடவடிக்கைகளையும் சில அற்ப சக்திகளின் நடவடிக்கைகளால் அரித்துவீழ்த்திட முடியாது.பாஜகவும், கார்ப்பரேட்டுகளின் ஊடகங்களும்சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் செங்கோட்டை நடவடிக்கையைப் பயன்படுத்திக்கொண்டு, வீரம் செறிந்த முறையில் நடைபெற்ற மாபெரும் விவசாயிகள் இயக்கத்தையும், விவசாயிகள் சங்கங்களையுமே கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றன. எனவே, நடந்தசம்பவங்களை உள்ளது உள்ளபடி மக்களுக்குச் சொல்லவேண்டியது அவசியமாகும்.
பஞ்சாபின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், ஹரியானாவில் பல பகுதிகளிலிருந்தும், உத்தரப்பிரதேசத்தில் தில்லியின் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்களும் டிராக்டர்களும் தில்லியை நோக்கி வந்து பங்கேற்றதன் காரணமாகவே இத்தகு நிகரற்ற மக்கள் அணிவகுப்பு சாத்தியமானது. சுருக்கமாகச் சொல்வதென்றால், மூன்று வேளாண் அவசரச் சட்டங்களும் ஜூன் மாதத்தில், பிரகடனம் செய்யப்பட்டதிலிருந்தே, பஞ்சாபிலும் ஹரியானாவிலும் விவசாயிகளின் மத்தியில் இவற்றுக்கெதிரான கோபத்தீகொஞ்சம் கொஞ்சமாக பற்றி எரியத்தொடங்கிவிட்டது.
ஐந்து மாதமாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பில் அங்கம் பெறாத விவசாயிகளும்கூட விவசாயசங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலுக்கிணங்க நடைபெற்ற போராட்டங்களில் தாங்களாகவே வந்து கலந்துகொண்டனர். சாமானிய விவசாயிகளும், அவர்தம் குடும்பத்தினரும் மற்றும் ஒட்டுமொத்த கிராம மக்களும் இயக்கத்தில் கலந்துகொண்டிருப்பதிலிருந்து, இந்த இயக்கமானது எந்தவொரு தனிப்பட்டஅமைப்பு அல்லது தலைவரின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இல்லை என்கிற அளவிற்கு மாபெரும் ஓர் இயக்கமாக உருவாகிவிட்டதைக் காட்டுகிறது.
தவறாக வழிநடத்தியது யார்?
அதனால்தான் இந்த இயக்கத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, சில அசாதாரண நடவடிக்கைகளை, சில தவறாக வழிநடத்தப்பட்ட சக்திகளின் மூலமாக நடத்தி, ஒட்டுமொத்த விவசாயிகள் சங்கங்களையும், அதன் தலைவர்களையும் குறைகூறுவதற்கான முயற்சிகள் தூண்டப்பட்டிருக்கின்றன. இவ்வாறு தவறான வழியில் ஒரு சிறு பிரிவினரைச் செயல்பட வைத்தது யார் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும்என்பது நிச்சயம். இந்த சக்திகளை, “சம்யுக்தகிசான் மோர்ச்சா” உறுதியுடன் கண்டித்திருக்கிறது, இயக்கத்தைத் தொடர்ந்து அமைதியானமுறையில் முன்னெடுத்துச் செல்லவும் உறுதிபூண்டிருக்கிறது.குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் அணிவகுப்பில் கலவரம் நடைபெற்றதாகவும், வன்முறைகள் நடைபெற்றதாகவும் கூறுவதும் ஒரு நேர்மையற்ற சூழ்ச்சியாகும். தவறாக வழிநடத்தப்பட்ட கிளர்ச்சியாளர்களும்கூட பொதுச் சொத்துக்கோ, தனியார் சொத்துக்கோ தாக்குதல் எதையும் நடத்திடவில்லை, கடைகளைச் சூறையாடவில்லை, சாமானிய மக்களுக்கு எதிராக தாக்குதல் எதுவும் தொடுத்திடவில்லை. செங்கோட்டையில் மட்டும் கலைச்சின்னங்கள் சில அழிக்கப்பட்டிருக்கின்றன. நிர்ணயிக்கப்பட்ட வழியிலிருந்து பிறழ்ந்துசென்றவர்களைக் கட்டுப்படுத்திட காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்த இடங்களில் ஒருசில மோதல்கள் நடைபெற்றிருக்கின்றன.
காட்டுமிராண்டித்தன தாக்குதல்
ஹரியானா மாநிலத்தில் பல்வால் என்னுமிடத்திலிருந்து தில்லியை நோக்கி வந்த விவசாயிகள், சிக்ரி எல்லையில் ஹரியானா காவல்துறையினரால் காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கப்பட்டனர் என்பதை மறந்துவிட முடியாது. இவ்வளவுக்கும் அவர்கள் தில்லி வரை வருவதற்கு காவல்துறையினரிடம் முன்அனுமதி பெற்றிருந்தனர். 23 வயது இளைஞர்ஒருவர், கண்ணீர்ப்புகை குண்டு தாக்குதலின்போது அவர் வந்த டிராக்டர் கவிழ்ந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளார். தில்லிக் காவல்துறையும் எண்ணற்ற டிராக்டர்களை சேதப்படுத்தியுள்ளது. கடந்த இரு மாதங்களாகவே, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தில்லியின் எல்லைகளில் அமைதியான முறையில் கிளர்ச்சிப் போராட்டங்களை ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும், கடும் குளிரையும், மோசமான பருவநிலையையும் துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டு, நெஞ்சுறுதியுடன், நடத்திக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் வேளாண் சட்டங்களை ரத்து செய்யமுடியாது என்று பிடிவாதமான முறையில் மறுத்துவருவதும், நியாயப்படுத்த முடியாத விதத்தில் அணுகுமுறையைப் பின்பற்றிவருவதும்தான் விவசாயிகளை, ஜனவரி 26 அன்றைய டிராக்டர் அணிவகுப்புக்கு இட்டுச் சென்றது.
குடியரசு தினத்தன்று தில்லியில் மக்களின் அதிகாரம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் காட்சி, சில பாஜக ஆட்சியாளர்களைப் பயமுறுத்தி இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். இதன் காரணமாக வரவிருக்கும் காலங்களில் அமைதியாக நடைபெற்றுவரும் கிளர்ச்சிப் போராட்டங்களை சீர்குலைத்திடவும், விவசாயசங்கங்கள் மீது அவதூறுச் சேற்றை வாரிஇறைத்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இத்தகைய முயற்சிகளை விவசாய இயக்கங்கள் ஒன்றுபட்டு நின்று முறியடித்திட வேண்டியிருக்கும்.
மவுனம் சாதித்த தில்லி ஆணையர்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் தில்லிக் காவல்துறை, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் விவசாயிசங்கங்களைச் சேர்ந்தவர்களில் சுமார் 40 பேர்களின்மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருக்கிறது. இந்தத் தலைவர்கள்தான் தில்லியை நோக்கிவரும் பாதைகளில் டிராக்டர்கள் பேரணியை நடத்தி வந்தவர்கள் என்றஉண்மையுடன் பரிசீலனை செய்யும்போது அரசின் இந்நடவடிக்கை ஒரு மோசமானவக்கிரமான நடவடிக்கை என்பது தெரியவரும்.விவசாய சங்கத் தலைவர்களைக் குற்றம்சாட்டிய, தில்லி காவல்துறை ஆணையர், செங்கோட்டையில் வன்முறை வெறியாட்டங்களை நடத்திய கும்பல்களுக்குத் தலைமை தாங்கிச் சென்ற பாஜக-வுடன் தொடர்புடைய தீப் சித்து (Deep Sidhu) என்பவனைப்பற்றி கேள்வி கேட்டபோது, அவனுக்கு எதிராக எதுவும் கூறாது மவுனமாக இருந்துவிட்டார். ஜனவரி 26 அன்று நாட்டிலுள்ள பல்வேறு மாநிலத் தலைநகர்களிலும், மாவட்டத் தலைநகர்களிலும் டிராக்டர்கள் பேரணி, விவசாயிகள் பேரணி நடைபெற்றுள்ளன. இதனையொட்டி, நாசிக்கிலிருந்து மும்பை நோக்கியும்ஒரு மாபெரும் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. சென்ற வாரம் கொல்கத்தாவிலும், சென்னையிலும் விவசாயிகள்-தொழிலாளர்
கள் மாபெரும் பேரணிகள் நடைபெற்றன. தில்லியின் எல்லைகளில் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிற விவசாயிகள் தனியாக இல்லை. இந்த இயக்கம் முன்னிலும் பன்மடங்கு உறுதியுடன் தொடரும். மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இம்மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். எதிர்க்கட்சிகள் இந்தக் கோரிக்கையை ஒன்றுபட்டு நின்று வலியுறுத்திட வேண்டும்.
பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம் ஜனவரி - 27, 2021
தமிழில்: ச.வீரமணி