india

img

நாட்டின் வளங்களை கார்ப்பரேட்கள் கொள்ளையடிக்கவே வேளாண் சட்டங்கள்.... விவசாயிகள் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு....

புதுதில்லி:
நாட்டின் வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்கவே ஒன்றிய பாஜக அரசால்  வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தில்லியில்  நடைபெறும் விவசாயிகள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் மோடி அரசால் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனை எதிர்த்தும் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் தில்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் பல மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாடாளுமன்ற வீதியில் “விவசாயிகள் நாடாளுமன்றம்” நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான புதன்கிழமையன்று மழை தொடர்ந்து பெய்துவந்த நிலையிலும் நடைபெற்றது. 

ஜூலை 28 புதன்கிழமையன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள ஒப்பந்த வேளாண் சட்டத்தின் பாதகமான அம்சங்களைத் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து எடுத்துக்கூறினர். தாங்கள் பயிர்செய்த விவசாயப் பொருள்களை கார்ப்பரேட் ஒப்பந்ததாரர்கள் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி வாங்க மறுக்கிறார்கள் என்று கூறினர். கார்ப்பரேட் விவசாயத்திற்கு வசதி செய்து தருவதற்காகவும், நாட்டின் வளங்களைக் கொள்ளை யடித்திடவும் இந்தச் சட்டம் வசதி செய்து தந்திருக்கிறது என்று விவசாயிகள் நாடாளுமன்றத்தில் பேசிய அனைத்து உறுப்பினர்களும் விளக்கினர். ஒட்டுமொத்தத்தில் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை நாடாளுமன்றத்தில் பேசிய அனைவரும் சுட்டிக்காட்டினர். ஒப்பந்த வேளாண் சட்டத்தின் மீதான விவாதம் வியாழனன்றும் நடைபெற்றது.நாட்டில் நிலத்தில் உழும் விவசாயிகளின் நலன்கள் மோடி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கிற வேளாண்சட்டங்கள் மூலம் காவு கொடுக்கப் பட்டிருப்பதைப் போன்றே, இப்போது கடல் பகுதியை நம்பி வாழும் மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களின் நலன்களைக் காவு கொடுக்கும் விதத்தில் நாடாளுமன்றத்தில் இந்திய கடல் மீனவள சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

வேளாண்சட்டங்களைக் கொண்டுவந்தபோது எப்படி அரசாங்கமானது விவசாயி களுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லையோ அதேபோன்று இப்போது மீனவர்களையும், மீன்பிடித்தொழிலாளர்களையும் கடுமையாகப் பாதித்திடும் இந்தச் சட்டமுன்வடிவு குறித்தும் எந்த மீனவர்அமைப்புகளுடனும் மீன்பிடித் தொழிலாளர்கள் அமைப்புடனும் மோடி அரசாங்கம் எவ்விதமான பேச்சுவார்த்தையும் நடத்திட வில்லை என்று சுட்டிக்காட்டினர். இந்தச் சட்டமுன்வடிவும் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்துவிட்டு, ஒன்றிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும்,இது மாநில அரசாங்கங்களின் நிதிநிலைமையை மேலும் பலவீனப் படுத்திடும் என்றும், மீனவர்களின் அடிப்படை உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பறித்திடும்விதத்தில் இதில் அவர்கள் மீன் பிடிப்பதற்காகப் பதிவு செய்வது தொடர்பாகவும், உரிமங்கள் பெறுவது தொடர்பாகவும் விதிகள் கொண்டுவரப் பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தனர்.மழை விடாது பெய்தபோதிலும், தில்லியின் எல்லைகளில் இயக்கத்தை யும்,  நாடாளுமன்ற வீதியில் நடைபெறும் நாடாளுமன்றத்தையும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விவசாயிகள் வெற்றிகரமாக நடத்திக்கொண்டி ருக்கிறார்கள்.(ந.நி.)

;