headlines

img

தவறான தகவல் பரப்புவது யார்?

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் வேளாண் சட்டங்கள் குறித்தும் தவறான தகவல்கள்மக்களிடம் பரப்பப்படுகிறது என்றும் விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்படும், சிலரின் குடியுரிமை பறிக்கப்படும், இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவோம் என்று சில தனிநபர்களும் அமைப்புகளும் தவறாகப் பிரச்சாரம் செய்கின்றன என்றும் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தொண்டர்கள் மத்தியில் செவ்வாயன்று பேசும் போது குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இதில் குறைப்படுவதற்கு என்ன இருக்கிறது? சரியாகத் தானே எடுத்துரைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்துத்துவப் பின்னணி கொண்ட, கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதாயம் தரும் சட்டங்களையும் திட்டங்களையும் நாடாளுமன்ற நடைமுறைகளையும் வழிமுறைகளையும் புறக்கணித்து ஜனநாயக முறைப்படியும் மரபுப்படியும் கடைப்பிடிக்கவேண்டியவற்றை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவசரஅவசரமாகவும் மொத்தமாகவும் கொத்தாகவும் கொண்டுவந்து விவாதிக்க அவகாசம் தராமலேயே, தனக்கிருக்கும் பெரும்பான்மையை வைத்து குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது மத்திய அரசின் திட்டமிட்ட அரசியல் இல்லையா?இது மிகப்பெரிய சதியில்லையா?

ஆனால் பிரதமர் மோடி, எங்கள் அரசு உருவாக்கிய வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், தொழிலாளர் சட்டம் ஆகியவை பற்றி தவறான தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது என்றும் இதற்கு பின்னணியில் திட்டமிட்ட அரசியல் இருக்கிறது, மிகப் பெரியசதி இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அவரதுபேச்சு, ‘தான் திருடி பிறரை நம்பான்’ என்ற பழமொழியையே நினைவூட்டுகிறது. ஒருபொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மையாக்க நினைப்பதுதான் பாசிச சிந்தனையின் நடைமுறை.அதைத் தானே இந்துத்துவா கும்பல் இந்தியாவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் சிலரின்குடியுரிமை பறிக்கப்படும் என்பதில், வேளாண் சட்டங்கள் மூலம் நிலம் கையகப்படுத்தப்படும் என்பதில், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு மூலம் அவர்கள் போராடிப் பெற்ற உரிமைகளும் சலுகைகளும் பறிக்கப்படும் என்பதில் தவறான தகவல் என்ன இருக்கிறது? இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்; மநுஸ்மிருதிஅடிப்படையில் திருத்தவேண்டும் என்பதும்ஆர்எஸ்எஸ் -சின் நீண்டகால உள்ளக்கிடக்கைதானே! 

இவையெல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போனதால் பாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதை அண்மைக்காலத்திய தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. அதனால் தான் மோடி இவ்வாறு பேசியிருக்கிறார். இவர்களின் திட்டமிட்ட அரசியலும் சதியும் இந்துத்துவா - கார்ப்பரேட் ஆதரவு செயல்பாடுகள் என்பதை மறைப்பதற்காக அவர் போடும் ஏழை பங்காளன் வேஷம் மக்கள் மத்தியில் எடுபடாது.

;