லக்னோ:
உ.பி. மாநிலம் காஸியாபாத்தில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வதந்தி பரப்பி, மதவன்முறையைத் தூண்டியதாக ‘டுவிட்டர்’ நிறுவனம் மீதும், பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு டுவிட்டர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதைக் காரணம் காட்டி, அந்த நிறுவனத்திற்கு வழங்கி வந்த சட்டப் பாதுகாப்பை ஒன்றிய அரசு ரத்து செய்த நிலையில், உடனடியாக உ.பி. பாஜக அரசுடுவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.மத்திய பாஜக அரசு கடந்த மே 25முதல் நாட்டில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. ‘சமூக ஊடக நிறுவனங்கள் அதன்அலுவலக முகவரி மற்றும்தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும்; சர்ச்சைக்குரிய பதிவை யார்முதலில் பதிந்தது என்றவிவரத்தை அரசுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்; சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்பன போன்ற விதிமுறைகளை வகுத்துள்ளது.
ஆனால், இந்த விதிமுறைகள் பயனர்களின் தனியுரிமையைப் பறிப்பதுடன், கருத்துச் சுதந்திரத்திற்கும் ஆபத்தானது என்று டுவிட்டர் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்தது. ஒருபதிவை யார்முதலில் பதிந்தது என்றவிவரத்தை அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை முகநூல், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டாலும், டுவிட்டர் நிறுவனம் ஒத்துப்போகவில்லை.ஆனால் 15 நாட்கள் மட்டுமே அவகாசம்; அதற்குள் எங்களின் விதிமுறைகளுக்கு இணங்கிப் போக வேண்டும்; இல்லாவிட்டால் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்என்று ஒன்றிய தகவல் தொழில்நுட் பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பகிரங்கமாக டுவிட்டர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். இதில் முடிவெடுக்க டுவிட்டர் நிறுவனம் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில், அதனை அவர் ஏற்பதாகஇல்லை.இந்நிலையில், தங்களின் புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி டுவிட்டர் நிறுவனத்திற்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சட்டபாதுகாப்பையும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செவ்வாயன்று விலக்கிக் கொண்டது.
டுவிட்டரில் வெளியிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் இனி டுவிட்டர் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி விட்டது.இந்த நடவடிக்கை விவாதத்தை எழுப்பிய, அடுத்த சில மணி நேரங்களிலேயே, டுவிட்டர் நிறுவனம் மீதுஉத்தரப்பிரதேசத்தில் வழக்கு பதியப்பட்டது. காஸியாப்பத்தில் கடந்த ஜூன் 5அன்று அப்துல் சமது என்ற இஸ்லாமிய முதியவர் சில இளைஞர்களால் தாக்கப்பட்டு, அவரின் தாடி மழிக்கப்பட்டது. இந்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலானது. இஸ்லாமியர் என்பதால் அந்த முதியவரை ‘ஜெய் ஸ்ரீராம்’என்று கூறச்சொல்லி இந்த தாக்குதல்நடந்ததாக வீடியோவில் குறிப்பிடப் பட்டு இருந்தது. ஆனால், இந்த சம்பவத்திற்கும் மதத்திற்கும் தொடர்பு இல்லை. இதுமத ரீதியான மோதல் கிடையாது என்று உத்தரப்பிரதேச போலீஸ் விளக்கம் அளித்தது. அந்த முதியவர் விற்ற தாயத்து தொடர்பாகவே தாக்குதல் நடந்ததாக கூறியது.
தாக்கிய இளைஞர்களில் இஸ்லாமியர் களும் இருந்ததாக உ.பி. காவல் துறை தெரிவித்தது. தற்போது இந்த சம்பவத்தை மையமாக வைத்தே, டுவிட்டர் நிறுவனம் தவறான செய்தியை வெளியிட்டு, மத ரீதியான மோதலை தூண்டியதாக 153, 153A, 295A, 505, 120B, 34 ஆகிய 6 பிரிவுகளில் உ.பி. பாஜக அரசின் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.மேலும், இந்த செய்தியை பகிர்ந்ததற்காக செய்தியாளர்கள் ராணா அய்யூப், சபா நக்வி, முகமது சுபையர், தி வயர் இணையதள செய்தி நிறுவனம், காங்கிரஸ் தலைவர்கள் சல்மான் நிசாமி ஷாமாமுகமது, மஸ்கூர் உஸ்மானி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.