லக்னோ;
உ.பி. மாநிலத்தின் புகழ்பெற்ற பராஸ் மருத்துவமனையில், நிர்வாகமே சுமார் 5 நிமிடங்கள் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, இறந்துபோன 22 நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்த சம்பவம்தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசியிருந்த அந்த மருத்துவமனையின் உரிமையாளர் அரிஞ்சய் ஜெயின் ‘ஏப்ரலில் எங்கள் மருத்துவமனையில் கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. நோயாளிகளை அழைத்துச் செல்லும்படி உறவினர்களிடம் நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் யாரும் தயாராகஇல்லை. எனவே, நான் ஒரு பரிசோதனையை நடத்த முடிவு செய்தேன். இதை ‘மோக் டிரில்’ (mock drill) என்று கூறலாம்கடந்த ஏப்ரல் 26 அன்று காலை 7 மணிக்கு ஐந்து நிமிடங்கள் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தினோம். இதனால் 22 நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்கியது. அவர்களின் உடல்கள் நீல நிறமாக மாறத் தொடங்கின. ஆகவே, அவர்களால் ஆக்சிஜன் இல்லாமல் வாழ முடியாது என்பதைக் கண்டறிந்தோம். பின்னர் ஐ.சி.யூ-வில் மற்ற 74 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனை அவர்களைத் தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டோம்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். யாருக்கு ஆக்சிஜன் தேவை எனக் கண்டறிந்து, அவர்களுக்குக் கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளிக்கவே இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால், ஏப்ரல் 26-27 நாட்களில் பராஸ் மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்ததாக ஒரு தகவல் வெளியாகவே, மருத்துவமனை நிர்வாகம் ஆக்சிஜனை நிறுத்தியதன் காரணமாக இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டதாக நினைத்த அரிஞ்சய் ஜெயின் ஏப்ரல் 26 அன்று 4 பேரும் ஏப்ரல் 27 அன்று மூன்று பேருமாக மொத்தமே 7 பேர்தான் உயிரிழந்ததாக அடுத்த சர்ச்சையைக் கிளப்பினார்.இதனிடையே, பிரச்சனை பெரிதான நிலையில், மருத்துவமனை உரிமையாளர் அரிஞ்சய்ஜெயின் மீது வழக்கு பதிவு செய்ததுடன், மருத்துவமனைக்கும் சீல் வைத்து, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். எனினும் உறவினர்கள் இதனை ஏற்பதாக இல்லை. பராஸ் மருத்துவமனையின் சிகிச்சை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டாக வேண்டும். தங்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் உயிரிழந்த 22 பேரின் உறவினர்கள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.