லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம், சீதாப்பூர் மாவட்டத்தில்பசுவதைத் தடைச் சட்டத்தைதவறாகப் பயன்படுத்தி, 4 பேரை சிறையில் அடைத்ததுதொடர்பாக, உ.பி. பாஜக அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தப்பிரதேச மாநிலம் சீதாபூரில், பசு வதையில் ஈடுபட்டதாகக் கூறி, சூரஜ், இப்ராஹிம், அனீஷ் மற்றும் ஷாஜாத்ஆகிய நான்கு இளைஞர் களை, உ.பி. போலீசார் கடந்த 2021 பிப்ரவரியில் கைது செய்தனர்.அவர்களுக்கு கடந்த 4 மாதமாக ஜாமீன் கூட வழங்கப்படாத நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதி அப்துல் மொயின் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த வழக் கில், “சூரஜ் உள்ளிட்ட நால்வரும் பேசிக் கொண்டிருந்தபோது, அதனை புதருக்குள் மறைந்திருந்து போலீசார் கேட்டனர்; அப்போது, மூன்றுகன்றுகளை அறுத்து, பெரும்தொகையைப் பெற்றோம் என்று 4 பேரும் அவர்கள் வாயாலேயே கூறினர்; மேலும், அவர்களிடமிருந்து இரண்டு காளைகள், ஒரு மூட்டை கயிறு, ஒரு சுத்தி, ஒரு ஆணிமற்றும் வெற்றுப் பைகள் மீட்கப்பட்டன” என்று எப்ஐஆரில் கூறப்பட்டிருப்பது பற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
“வெறுமனே காவல்துறை யினரால் காதால் கேட்கப்பட்டதாகக் கூறப்படும் உரையாடலின் அடிப்படையில், எப்படி ஒருவரை குற்றவாளிஎன முடிவு கட்ட முடியும்?”என்று கேட்ட அவர்கள், மேலும், இந்த நடவடிக்கைக்காக, அவர்கள் மீது பசுவதைத் தடைச் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 8-இன் கீழ் வழக்குப் பதிவு செய்வது எப்படி சரியாகும்? என்றும் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறும் உ.பி. காவல்துறைக்கு உத்தரவிட்டனர். முன்னதாக 22 வயது இளைஞர் சூரஜிற்கு, அலகாபாத் உயர்நீதிமன்றம் இரண்டு தனிநபர் உறுதிமொழியின் அடிப்படையில் ஜாமீனும் வழங்கியது.