உத்தரபிரதேசத்தில் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளது அப்பகுதியில் பதற்றம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த மர்ம காய்ச்சலால் இதுவரை மதுரா, ஆக்ரா, மற்றும் ராஜஸ்தானின் பரத்பூர் ஆகிய பகுதிகளில் 80 பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதிக வெப்பநிலை தவிர்த்து வேறு எந்த அறிகுறியும் தெரியாததால், அது என்ன வகை காய்ச்சல் என தெரியாமல் மருத்துவர்கள் திணறி வருவதாக மாவட்ட மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமை மருத்துவ அதிகாரி ரஜ்னா குப்தா கூறுகையில், பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு ஒரு குழு நேரடியாக சென்று மலேரியா, டெங்கு அல்லது கொரோனா தாக்கமா என கண்டறிய ரத்த பரிசோதனைகள் எடுத்துள்ளனர் என்று தெரிவித்தார். ரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைவாக காணப்படும் நிலையில், டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் எனவும் மருத்துவ அதிகாரிகள் கருதுகின்றனர்.