முசாபர் நகர்:
உத்தரப்பிரதேசத்தில், 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குபிறகு அரசு மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து மத புனிதத்தலங்களையும் அகற்ற வேண் டும் என்று அம்மாநில பாஜக முதல்வர் ஆதித்யநாத் கடந்த மார்ச் மாதம் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
கொரோனா தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு, அதனை தீவிரமாக அமல்படுத்தவும் அவர்உத்தரவிட்டார்.அனைத்து மத புனிதத் தலங் கள் என்று ஆதித்யநாத் அரசு கூறினாலும், நடைமுறையில் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்தே, உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக சந்தேகங்கள் எழுந்தன. விரைவிலேயே அவை உண்மையும் ஆயின.பாரபங்கி மாவட்டம் ராம்ஸனேஹி காட் தாலுகாவிலுள்ள 100 வருட பழமையான மசூதியை, உயர் நீதிமன்றத் தடையையும் மீறி, கடந்த மே 17 அன்று உ.பி. பாஜக அரசு இடித்துத் தரைமட்டம் ஆக்கியது. இது சிறுபான்மையினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மசூதி நிலம் தொடர்பான வாதப் பிரதிவாதங்களும் எழுந்தது.
இந்நிலையில், அந்த சர்ச்சை ஓய்வதற்கு உள்ளாகவே, உ.பி. மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் கத்தோலி தாலுகாவிலுள்ள ஒரு மசூதியையும், உ.பி. பாஜகஅரசு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளது. சன்னி முஸ்லிம்வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாகக் கருதப்படும் இந்த மசூதி,இடுகாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்தது. அதனை ஆதித்யநாத் அரசு இடித்துள்ளது. ஒரே மாதத்திற்குள் 2 மசூதிகளை இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளது.