உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் மோனா திவேதி. இவர் வெள்ளியன்று வீட்டில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முன்னதாக மோனா திவேதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மூன்று பக்கம் கடிதம் எழுதி அதை வாட்ஸ் அப் மூலம் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ஆளும் பாஜக கட்சித் தொண்டர்களாக இருக்கும் தனது கணவரின் சகோதரர்கள் அம்புஜா மற்றும் பங்கஜ் ஆகியோர் மன மற்றும் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். அதனாலேயே தான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாகவும் எழுதியுள்ளார்.
மேலும் இந்தியப் பெண்களுக்கு அவர்களின் வீடுகளில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுங்கள் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த கடிதத்தை கைப்பற்றி காவல்துறையினர் மோனா திவேதியின் கணவர் மற்றும் அவரது சகோதரர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.