லக்னோ : உத்திரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 39 குழந்தைகள் உட்பட 46 பேர் பலியாகியுள்ளனர். மேலும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12 குழந்தைகள் இந்த காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியது. கொரோனாவால் மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அடுத்து ஏற்படவிருக்கும் கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்த சூழலில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகளையே பாதித்துள்ளது. இந்த காய்ச்சலினால் தற்போது வரை 39 குழந்தைகள் உட்பட 46 பேர் பலியாகியுள்ளனர் .
இதனால் மேற்கு உத்திரப்பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தற்போது , ஆக்ரா, மதுராமெய்ன்புரி , எட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. அதிலும் , ஃபிரோசாபாத் மாவட்டத்தில் அதிகளவில் 135 பேர் இந்த காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 72 குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காய்ச்சல் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் , இருப்பினும் இதுவரை கொரோனாவுக்கும் இந்த டெங்கு காய்ச்சலுக்கும் எந்தவித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.