சட்ட நடவடிக்கை என்றதும் பின்வாங்கிய அண்ணாமலை!
ஊட்டச்சத்து பெட்டக விவகாரத்தில், டெண்டரே வழங்கப்படாத நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியதாக கூறியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரித்து இருந்தார். இதையடுத்து, பாஜக தலைவர் அண்ணா மலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “டெண்டர் கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. எங்கள் குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நட வடிக்கை வரவேற்கத்தக்கது” என்று பின்வாங்கியுள்ளார். மேலும் ஆவின் ‘ஹெல்த் மிக்ஸ்’ (Health Mix)-இன் நிலை என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் இயக்குநரான குஜராத் முதலாளி!
ரிசர்வ் வங்கி மத்திய வாரியத்தின் பகுதி நேர அதிகாரப்பூர்வமற்ற இயக்குநராக பங்கஜ் ஆர். படேல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத்தை பூர்வீகமாக கொண்டவரான படேல், இந்தியா வின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ‘சைடஸ் லைப் சயின்சஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் 4 ஆண்டுகள் இந்த புதிய பொறுப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் புற்றுநோய் சங்கத்தின் செயல் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அறங்காவலர். இன்வெஸ்ட் இந்தியா, மிஷன் ஸ்டீயரிங் குரூப் (எம்எஸ்ஜி) மற்றும் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரிய உறுப்பினர் என பங்கஜ் படேல் பல பொறுப்புகளை வகித்து வருகிறார்.
மம்தா கூட்டத்தில் காங்கிரஸ்
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மூலம் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இதனிடையே, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, தன்னிச்சையாக ஜூன் 15 அன்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளுக்கு கடிதமும் எழுதினார். இது குறுக்குச்சால் ஓட்டும் நடவடிக்கை என்ற விமர்சனம் எழுந்தது. எனினும், இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
பெரிய உருவத்தில் பிரதமர் மோடி!
புனேவின் டெஹூவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை பிரதமா் மோடி திறந்து வைப்பதையொட்டி, பாஜகவினர் பேனர்கள் வைத்துள்ளனர். அதில், துறவி துக்காராம் உருவத்தை விட, பிரதமா் மோடியின் படத்தை பெரிதாக காட்டியுள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் இளைஞரணி தலைவருமான ரவிகாந்த் வார்பே குற்றம் சாட்டினார். பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், ரவிகாந்த் வார்பே-யின் போராட்ட அறிவிப்பு காரணமாக அவருக்கு மகாராஷ்டிர போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பெரிய உருவத்தில் பிரதமர் மோடி!
புனேவின் டெஹூவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை பிரதமா் மோடி திறந்து வைப்பதையொட்டி, பாஜகவினர் பேனர்கள் வைத்துள்ளனர். அதில், துறவி துக்காராம் உருவத்தை விட, பிரதமா் மோடியின் படத்தை பெரிதாக காட்டியுள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் இளைஞரணி தலைவருமான ரவிகாந்த் வார்பே குற்றம் சாட்டினார். பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், ரவிகாந்த் வார்பே-யின் போராட்ட அறிவிப்பு காரணமாக அவருக்கு மகாராஷ்டிர போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சரத்பவாருக்கு ஆர்வம் இல்லை?
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முன்னிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், “சரத் பவார் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. பவார் மக்களைச் சந்திப்பதை விரும்பும் ஒரு மக்கள் மனிதர். அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
பீகாரை விட்டு போக மாட்டேன்!
குடியரசுத் தலைவர் பதவிக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பெயரும் அடிபட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலேயே அவர் முன்னிறுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள நிதிஷ் குமார், நான் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியில் இல்லை. நான் பீகாரை விட்டு எங்கும் போகப்போவதும் இல்லை. இதுபோன்ற தகவல்கள் எல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை” என்று தெரிவித்துள்ளார்.