புதுதில்லி:
இந்திய மீனவர்கள் அண்டை நாட்டின் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்படும்போது அவர்களை மீட்க ராஜதந்திரரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, மக்களவையில், பி. ஆர். நடராஜன், இந்தியமீனவர்கள், அண்டை நாட்டின் கப்பல்படையினரால் கடந்த மூன்றாண்டுகளில் தாக்கப்பட்டுள்ளநிகழ்வுகளின் எண்ணிக்கை எத்தனை என்றும், அவ்வாறு நம் மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்திட, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய அயல்துறை விவகாரங்கள் அமைச்சர் வி. முரளிதரன், நம் நாட்டின் மீனவர்கள் நம் கடல் எல்லையைத் தாண்டிச் சென்று மீன்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அண்டை நாட்டின் கப்பல் படையினரால் மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்படும் நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்கின்றன. பாகிஸ்தான் கப்பல்படையினரால் நம் மீனவர்கள் தாக்கப்பட்டதாக சில அறிக்கைகள் வரப்பெற்றிருக்கின்றன. சமீபத்தில் 2019 ஜனவரியில், பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமையினரால் இந்திய மீன்பிடி படகுமீது தாக்குதல்தொடுக்கப்பட்டு அப்படகு மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று, இலங்கைக் கடல்பகுதிகளில் மீன் பிடித்ததாகக் கூறப்பட்டு, இலங்கைக் கப்பல்படையினரால், இந்திய மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சில நிகழ்வுகளும் உண்டு.
அரசாங்கம், இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் உச்சபட்ச முன்னுரிமை கொடுக்கிறது. இந்திய மீனவர்கள் அண்டை நாட்டினரால் அவர்களுடைய மீன்பிடிபடகுகளுடன் கைது செய்யப்படுகையில், சம்பந்தப்பட்ட நாடுகளின் உயர்மட்ட தரப்பினருடன் கலந்துபேசப்படுகிறது. நம் கடுமையான ஆட்சேபணைகளையும் அந்நாடுகளிடம் பதிவு செய்யப்படுகிறது. அந்நாடுகளிடம் மீனவர்கள் பிரச்சனையை முழுமையாக மனிதாபிமான அடிப்படையிலும் அவர்களின் வாழ்வாதாரங்களின் அடிப்படையிலும் பரிசீலனை செய்திட வேண்டும் என்றும் அவர்களுக்கு எதிராக எவ்வித வன்முறையையும் பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்திக் கூறப்படுகிறது. இவ்வாறு அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டிடும் ராஜதந்திர பேச்சவார்த்தைகளின் காரணமாக 2014 மே மாதத்திற்குப் பிறகு இலங்கை அரசாங்கத்தால் 2004 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர், 380 படகுகளும் மீட்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று, பாகிஸ்தான் அரசுடன் மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் மூலமாக 2080 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர், 57 மீன் பிடி படகுகள் மீட்கப்பட்டிருக்கின்றன.இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.